விவசாய பணியில் ட்ரோன் வாயிலாக மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம்!
'ட்ரோன்' எனும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் பணி செய்யும், புதுக்கோட்டை மாவட்டம், மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அமுதா: கணவருக்கும், எனக்கும் சொந்த ஊரே மணப்பட்டி தான்; கணவர் விவசாயி. நான் பி.காம்., படித்திருந்தாலும் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டேன். 2006ல், இங்குள்ள அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தேன். அதற்கு கூடுதல் பட்டப்படிப்பு தேவைப்பட்டதால், எம்.ஏ., சமூகவியல் படித்தேன். 2010ல் அந்த ஒப்பந்தம் முடிந்ததும், மீண்டும் விவசாயம், கால்நடை வளர்ப்பு என மாறினேன். கடந்த 2023ல் வேளாண் துறை சார்பில், ஆளில்லா சிறிய விமானமான, 'ட்ரோன்' வாயிலாக, விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிக்க பயிற்சி கொடுத்து, தொழில் முனைவோரை உருவாக்க இருப்பதாக தகவல் கிடைத்தது; அதில் பங்கேற்று பயிற்சி எடுத்தேன். ட்ரோனை சரியாக இயக்குகிறேனா என்பதை பரிசோதித்த பின், எனக்கு உரிமம் கொடுத்தனர். அத்துடன் 10 லிட்டர், 'டேங்க்'கை சுமக்கும் ட்ரோன் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஆட்டோவும் வழங்கினர். அக்கம் பக்கத்து விவசாயிகளை அணுகியபோது, 'அதெல்லாம் சரிப்படாது' என்று ஒதுங்கினர். 'ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் மருந்து, உரத்தின் அளவும், நேரமும் மிச்சமாகும்; கூடுதலாக உரம் போடாததால் மண் வளமும் பாதுகாக்கப்படும்' என்று, இதன் சாதகங்களை ஒவ்வொரு விவசாயியிடமும் பொறுமையாக எடுத்து சொல்ல ஆரம்பித்தேன். பல விவசாயிகளுக்கு முதலில் இலவசமாக உரம், மருந்து தெளித்தேன். அதன்பின் எனக்கு வாய்ப்புகள் வழங்கினர். சுற்றுவட்டார பகுதிகள், சிவகங்கை, பெரம்பலுார், தென்காசி, காஞ்சிபுரம் என பல மாவட்ட விவசாயிகளும் எனக்கு வாய்ப்பு கொடுத்தனர். சாகுபடி அதிகம் நடக்கும் மாதங்களில், தினமும் 40 டேங்குகள் வரை மருந்து தெளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு டேங்க் மருந்து தெளிக்க, 500 ரூபாய் வாங்குகிறேன். நான் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டதை பார்த்து, மத்திய, மாநில வேளாண் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்ததால், கடந்தாண்டு குடியரசு தின விழாவில் ஜனாதிபதி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. விவசாய பணிகள் அதிகம் நடக்கும் காலங்களில், மாதம் 1.50 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். விவசாயம் குறைவாக இருந்தாலும், குறைந்தபட்சம் மாதம், 30,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உரம் தெளிக்கும் ட்ரோன் பைலட்டாக மாறியதும், எனக்கு புது அடையாளம் கிடைத்ததோடு அல்லாமல், கை நிறைய சம்பாதிக்கவும் முடிகிறது. மனத் தடையை துாக்கி போட்டு உழைக்க தயாரானால், எவரும் எந்த துறையிலும் சாதிக்கலாம்.