உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுபிள்ளைகள் சண்டையில் விபரீதம்; 8 வயது சிறுவனை கொன்றவர் கைது

சிறுபிள்ளைகள் சண்டையில் விபரீதம்; 8 வயது சிறுவனை கொன்றவர் கைது

பெங்களூரு : பெங்களூரில், 8 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்று, உடலை ஏரிக்கரையில் வீசிய, எதிர் வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார். விளையாடும் போது தன் பிள்ளைகளை சிறுவன் அடித்ததால், இந்த கொடூர செயலை செய்தது தெரிய வந்துள்ளது.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தேஸ்வர், 35. பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் வாடகை வீட்டில் மனைவி, ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்தார்; கூலி வேலை செய்தார். இவரது எதிர்வீட்டிலும், பீஹார் மாநில தம்பதி வசிக்கின்றனர்.

அடிக்க கூடாது

இந்த தம்பதிக்கு ராமானந்தா, 8 என்ற மகன் இருந்தார். சந்தேஸ்வரின் பிள்ளைகளும், ராமானந்தாவும் தினமும் ஒன்றாக விளையாடுவர். அப்போது ராமானந்தா, சந்தேஸ்வரின் பிள்ளைகளை அடித்துள்ளார். சந்தேஸ்வர், 'என் பிள்ளைகளை அடிக்கக் கூடாது' என்று ராமானந்தாவை மிரட்டி உள்ளார்.கடந்த 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு, வீட்டின் முன்பு நின்று விளையாடிய சந்தேஸ்வரின் மகனை, ராமானந்தா அடித்துள்ளார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த சந்தேஸ்வர், ராமானந்தாவை தன் வீட்டிற்குள் துாக்கி சென்று அடித்துள்ளார்.இதுபற்றி தன் தாயிடம் சொல்வதாக ராமானந்தா கூறி உள்ளார். இதனால் கோபம் அடைந்த சந்தேஸ்வர், ராமானந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வீட்டை பூட்டிவிட்டு ராயசந்திராவில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். ராமானந்தாவை காணவில்லை என்று, அவரது தாய் பல இடங்களில் தேடினார்.

சாக்கு மூட்டை

இந்நிலையில், இரவு 11:00 மணிக்கு வீட்டிற்கு வந்த சந்தேஸ்வர், வீட்டிற்குள் இருந்து ஒரு சாக்கு மூட்டையை வெளியே எடுத்துச் சென்றார். அதில் என்ன உள்ளது என்று, பக்கத்து வீட்டினர் கேட்ட போது எதுவும் பேசவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பரப்பன அக்ரஹாரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சந்தேஸ்வர் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்த போது, ராமானந்தாவை கழுத்தை நெரித்து சந்தேஸ்வர் கொன்றது பற்றி, அவரது மகன் கூறினார்.மறுநாள் 7ம் தேதி மதியம் ராயசந்திரா ஏரிக்கரையில், சாக்கு மூட்டையில் ராமானந்தா உடல் மீட்கப்பட்டது.தலைமறைவாக இருந்த சந்தேஸ்வரை போலீசார் அன்று இரவு கைது செய்தனர். விளையாடும் போது தன் பிள்ளைகளை அடித்ததாலும், தன் பேச்சை அலட்சியப்படுத்தியதாலும் ராமானந்தாவை கொன்றதாக சந்தேஸ்வர் ஒப்புக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை