வாஷிங்டன்: சீனா உடனான வர்த்தக ஒப்பந்தங்களை ஈர்ப்பதற்காக, தைவானுக்கு வழங்கப்படவிருந்த, 3,480 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவித் தொகுப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளதாக, 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனா, கிழக்கு ஆசிய நாடான தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவானை ஒட்டிய கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவின் உதவியை தைவான் நாடியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p5uoxlx2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிடம் இருந்து அந்நாட்டு ராணுவத்துக்கு தேவையான ஆயுத உதவிகளை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், நேட்டோ உறுப்பு நாடுகள் உள்ளிட்ட தன் நட்பு நாடுகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் தங்கள் நாட்டு பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்குமாறும், அமெரிக்காவை நம்பியிருப்பதை குறைத்துக் கொள்ளுமாறும் அந்நாடுகளை கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து, தைவான் தன் ராணுவ செலவினங்களை அதிகரிக்க திட்டமிட்டிருந்தது. மேலும், அந்நாடு, அதிக ட்ரோன்கள் மற்றும் கப்பல்களை பெறுவதற்காக நிதியையும் அங்கீகரித்தது. இந்நிலையில், அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன. இதில் சமூக ஊடகமான டிக்டாக், அமெரிக்க தொழில்துறைக்கு தேவையான அரிய வகை காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் இப்பேச்சில் இடம் பெற்றுள்ளன. மேலும், அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன் கொள்முதல் செய்வதை சீனா கைவிட்டு, பிரேசிலிடம் இருந்து கொள்முதல் செய்வதால், அமெரிக்க விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து சீனா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த வேளையில், தைவானுக்கு ஆயுத உதவிகளை வழங்கினால், அது சீனாவின் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தடையாக இருக்கும் என கருதிய டிரம்ப், தைவானுக்கு வழங்குவதாக இருந்த, 3,480 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவி தொகுப்புக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளதாக அமெரிக்க நாளிதழ், 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்து உள்ளது-. நிறுத்தப்பட்ட ராணுவ தொகுப்பில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை அடங்கும் என கூறப்படுகிறது.