சபரிமலை சர்ச்சையை சந்தர்ப்பவாதமாக மாற்றுவதா: தேவசம் போர்டு ஆவேசம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை சர்ச்சையை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்துகின்றன என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன்பாக உள்ள இரு துவாரபாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில், 4 கிலோ அளவுக்கு தங்கம் குறைந்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாதமாக பயன்படுத்துகின்றன என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கண்டித்துள்ளது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: சபரிமலையை பொறுத்தவரை விரிவான விசாரணை நடத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடத்திய சர்வதேச அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சியில் இருந்து தான் இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. அதை சீர்குலைக்கும் வகையிலேயே இப்படியான பொய் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக துவார பாலகர்கள் சிலையில் இருந்த தங்க பீடம் காணாமல் போய்விட்டதாக நன்கொடையாளர் உன்னி கிருஷ்ண பொட்டி புகார் தெரிவித்திருந்தார். இதனால், கேரள உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், காணாமல் போனதாக சொல்லப்பட்ட துவாரபாலகர்கள் பீடம், பொட்டியின் உறவினர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
நடிகர் ஜெயராம் வீட்டில்
சபரிமலை தங்க கவசம்
சபரிமலை துவாரபாலகர்கள் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசங்கள், நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் ஜெயராம் கூறியதாவது: சபரிமலைக்கு செல்லும் போதெல்லாம் நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் பொட்டியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தான் ஒருமுறை, அந்த தங்க கவசங்கள் செப்பனிடுவதற்காக சென்னைக்கு வந்திருப்பதாக என்னிடம் தெரிவித்தார். உடனடியாக செப்பனிடும் ஆலைக்கு சென்று நானும், என் நண்பர்களும் பார்த்தோம். மீண்டும் சபரிமலைக்கு எடுத்துச் செல்லும்போது, வழியில் என் வீட்டில் வைத்து பூஜை செய்ய அனுமதி கேட்டேன். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதனால், என் வீட்டில் சில நிமிடங்கள் வைத்து தங்க கவசங்களுக்கு பூஜை செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.