உளவு பார்த்த புகாரில் பஞ்சாபில் இருவர் கைது
சண்டிகர்:பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, பஞ்சாபை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் நேற்று கூறியதாவது:குர்பிரீத் சிங் என்ற கோபி போஜி மற்றும் சஹில் மசி என்ற ஷாலி ஆகியோரை, பஞ்சாபின் அமிர்தசரஸ் ரூரல் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் செயல்பாடு குறித்து ரகசிய நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், பின், இருவரையும் கைது செய்துள்ளனர்.அவர்கள் இருவரும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர் என்பதற்கான ஆதாரங்களை கைப்பற்றிய பின், கைது செய்யப்பட்டனர்.முக்கியமான ஆதாரங்களை இவர்கள் இருவரும், பென் டிரைவ் வாயிலாக பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளனர் என்பது அவர்களிடம் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவர்களுடன் தொடர்பில் இருந்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யின் நபர், ரானா ஜாவத் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வசமிருந்து, இரண்டு மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறினார்.