உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை; கோவையை சேர்ந்த இருவருக்கு 8 ஆண்டு சிறை

பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை; கோவையை சேர்ந்த இருவருக்கு 8 ஆண்டு சிறை

கொச்சி: தமிழகம் மற்றும் கேரளாவில் நாசவேலைகள் செய்ய ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு செய்த விவகாரத்தில், கோவையைச் சேர்ந்த இருவருக்கு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் தலா எட்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. பிரசாரங்கள் கடந்த 2019ல், கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தொடர்பாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில், உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், 27, ஷேக் ஹிதயதுல்லா என்ற பெரோஸ் கான், 35, ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இருவரையும் கைது செய்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு அவர்கள் வேலை செய்தது உறுதி செய்யப்பட்டது. 2019ல் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, அந்நாட்டைச் சேர்ந்த ஆறு பேருடன் அசாருதீன், ஷேக் ஹிதயதுல்லா ஆகியோர் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்றம் உறுதி

அதேபோல், தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு நாசவேலைகளை அரங்கேற்ற இருவரும் திட்டமிட்டிருந்ததும், இதற்கான ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கேரளாவின் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கடந்த வாரம் நடந்த விசாரணையில், சதி திட்டம் தீட்டுதல், பயங்கரவாத அமைப்பை ஆதரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அசாருதீன், ஹிதயதுல்லா இருவரும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், இருவருக்குமான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் தலா எட்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 30, 2025 03:52

சமூக வலைத்தளங்களில் இதே கோட்பாடுகளுடன் பலர் உலவி வருகிறார்கள். தீவிரவாதம் தவறு என்று சொன்னால் போதும் - திராவிட உடன்பிறப்புக்கள் போல கண்டமேனிக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தமிழகத்தில் திராவிட மாடலில் சமூக தீவிரவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை