சக மாணவரை துப்பாக்கியால் சுட்ட பள்ளி மாணவர்கள் இருவர் கைது
குருகிராம்: ஹரியானாவில், தங்களுடன் படிக்கும் மாணவரை, பிளஸ் 1 மாணவர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் குருகிராமின் செக்டார் 48ல் உள்ள மத்திய பூங்கா ரிசார்ட் பகுதியைச் சேர்ந்த, ஒரே பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர் இருவருக்கு இடையே முன்பகை இருந்துள்ளது. தன் வீட்டிற்கு வருமாறு சக மாணவரை மற்றொருவர் அழைத்துள்ளார். அப்போது அவர்களுடன் படிக்கும் இன்னொரு மாணவரும் வந்தார். வீட்டிற்கு அழைத்த மாணவர் அவரது நண்பரான இன்னொரு மாணவருடன் சேர்ந்து, தன் தந்தை வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சக மாணவரை சுட்டுள்ளார். இதில், அவர் காயம் அடைந்தார். அவரது பெற்றோர் அளித்த புகாரையடுத்து துப்பாக்கியால் சுட்ட மாணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.