வாகன விபத்து: 5 ராணுவ வீரர்கள் பலி
பூஞ்ச், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பனோய் என்ற இடத்துக்கு, 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் நேற்று புறப்பட்டது.கரோவா என்ற இடத்துக்கு வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் இருந்து விலகி, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராணுவ வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்புப் படையினர், காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடக்கிறது.