அவையில் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள்: ராஜ்யசபா எம்பிக்களுக்கு துணை ஜனாதிபதி வேண்டுகோள்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அவையில் உரிமைக்காக குரல் கொடுங்கள், ஆனால் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள் என்று ராஜ்ய சபா எம்பிக்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டில்லியில் உள்ள பார்லி. வளாகத்தில் அரசியல் கட்சிகளின் ராஜ்ய சபா குழுத்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட 29 பேர் கலந்து கொண்டனர். அவர்களை துணை ஜனாதிபதியும், ராஜ்ய சபா சபாநாயகருமான சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார். பதவியேற்ற பின்னர் முதல்முறையாக நடைபெற்ற கூட்டம் இதுவாகும். இதுகுறித்து துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது; குறுகிய காலத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் ஒன்று கூடியதற்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்தார். கூட்டத்தில் அவர் பேசும் போது, அவை நடவடிக்கைகளின் போது கண்ணியம், ஒழுக்கம் மற்றும் மரியாதையுடன் செயல்பட வேண்டியது முக்கியம். அவையில், நிகழ்த்தப்படும் உரைகளில் அரசியல் சாசனமும், ராஜ்யசபா விதி புத்தகமும் வழிகாட்டியாகவும், லட்சுமண ரேகையாகவும் உள்ளன. அவையின் புனிதத்தன்மையை பராமரிக்க அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். மக்களாட்சியை வலுப்படுத்த அவையின் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தின் போது சி.பி.ராதாகிருஷ்ணனிடம் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ராஜ்யசபா குழுத்தலைவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அவையில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் உரிய பதிலளிக்க வேண்டும். தற்போது உள்ளது போல, அவையில் நீண்ட நேரம் உரையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சிறிய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு உரையாற்றும் போது கூடுதல் நேரம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.