உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேடப்பட்ட கொள்ளையன் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு

தேடப்பட்ட கொள்ளையன் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு

புதுடில்லி:தேடப்பட்ட கொள்ளையன் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார். தென்கிழக்கு டில்லி அமர் காலனியில், 20ம் தேதி நடந்த கத்திக்குத்து- மற்றும் கொள்ளைச் சம்பவத்தில், சாகர் என்ற மாயாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். காலிந்தி கஞ்ச் அருகே மாயா பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் படையினர் தேடுதல் வேட்டையை துவக்கினர். சரிதா விஹார் மேம்பாலத்தில் நேற்று முன் தினம் இரவு 11:45 மணிக்கு ஸ்கூட்டரில் வந்த மாயாவை மறித்தனர். ஆனால், ஸ்கூட்டரை விட்டு இறங்கி ஓடிய மாயா, போலீசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினார். போலீஸ் கொடுத்த பதிலடியில் மாயாவின் வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். சிறப்புப் படையினர் சுற்றிவளைத்து மாயாவை கைது செய்து, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். சப்தர்ஜங் மருத்துவமனையில் மாயாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொள்ளை, வழிப்பறி மற்றும் மிரட்டி பணம் பறித்தல், போலீஸ் மீது தாக்குதல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மாயா மீது நிலுவையில் உள்ளன. அவரது கூட்டாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !