வனப்பகுதியில் ஓடும் பராபோலே ஆற்றில் நீர் சாகச சவாரி
குடகு மாவட்டத்தின் கோனிகொப்பாலில் இருந்து 27 கி.மீ., தொலைவில் பாய்ந்து ஓடுகிறது பராபோலே ஆறு. கித்து ககது ஆற்றில் இருந்து உருவான இந்த ஆறு, பிரம்மகிரி மலையை கடந்து, அரபிக்கடலில் சங்கமமாகிறது.சுற்றுலா பயணியருக்கும், சாகச பிரியர்களுக்கும் ஏற்ற இடம் பராபோலே ஆறாகும். தென் மாநிலத்தில் சவால் நிறைந்த படகு சாகசத்துக்கு பெயர் பெற்றது. 3 முதல் 4 கி.மீ., துாரம் ஓடும் இந்த ஆற்றில் படகு சவாரி செய்தால், கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாகும். கிளாஸ் வகை
இந்த படகு சவாரியை கிளாஸ் 2, 3, 4 என மூன்று வகையாக பிரிக்கின்றனர். 'கிளாஸ் 2' என்றால் சிறு அலைகள், பள்ளங்கள், அகலம், சீரான பாதையாக இருக்கும்; இதில் அடிப்படை துடுப்பு திறன் தேவை. 'கிளாஸ் 3' என்றால் கடினமாக இருக்கும். மிதமான, ஒழுங்கற்ற அலைகள், சிக்கலான பாதையில் அனுபவம் தேவைப்படும். 'கிளாஸ் 4' அதிகளவில் சிரமமாக இருக்கும். இதற்கு அனுபவம் மிக முக்கியம்.இதற்கு சில பெயர்களும் வைத்துள்ளனர். 'மார்னிங் காபி, கிராஸ் ஹாப்பர், ரம்பா சம்பா, விக்கெட் விட்ச், பிக் பாங்க்' என அழைக்கின்றனர்.அழகான நிலப்பரப்பில் பாய்ந்து ஓடும் ஆற்றில், படகு சவாரி செய்வது புதிய அனுபவத்தை அளிக்கும். குறிப்பாக மழை காலத்தில் பயணிக்கும் போது, புதிய உற்சாகம் அளிக்கும். அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த ஆறு செல்கிறது. ராப்டிங்கில் செல்வோர், பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தின் பிரமிப்பூட்டும் காட்சிகளை காணலாம். 110 கிலோ எடை
படகு சவாரி செய்வோருக்கு உயிர் பாதுகாப்பு கவசம் அளிக்கின்றனர். அதை அணிந்து கொண்டு தான் பயணிக்க வேண்டும். இதில் பயணிக்க விரும்புவோர் 13 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 110 கிலோ எடைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒருவருக்கு 1,200 முதல் 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த ராப்டிங் பயணம், ஆண்டு முழுதும் நடக்கிறது. சிறந்த ராப்டிங் அனுபவத்தை விரும்பினால், மழை காலத்தில் செல்வது சிறந்தது. இன்னும் சிறந்த அனுபவத்துக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் சென்றால், ஆற்றில் நீர் வேகமாக பாய்ந்தோடும்.பெருக்கெடுத்து ஓடும் பராபோலே ஆற்றில் சாகச படகு சவாரி.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் மைசூரு செல்லலாம். அங்கிருந்து மடிகேரி பஸ் நிலையத்துக்கு சென்றடைய வேண்டும். இதன் பின் பஸ், டாக்சி, காரில் செல்லலாம். ரயிலில் செல்வோர் மடிகேரி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, பஸ்சில் செல்லலாம்பஸ்சில் செல்வோர் கோனிகொப்பா சென்று அங்கிருந்து டாக்சியில் செல்லலாம். - நமது நிருபர் -