| ADDED : ஜன 04, 2025 01:25 AM
“நாடு முழுதும் ஏழைகளுக்கு, கோடிக்கணக்கான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளேன். ஆனால், எனக்காக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டது இல்லை. ''நினைத்திருந்தால் பிரமாண்ட கண்ணாடி மாளிகையே கட்டியிருக்க முடியும். கடந்த 10 ஆண்டு களாக ஆம் ஆத்மி ஆட்சியில் பேரழிவில் சிக்கி தவிக்கும் டில்லியை மீட்போம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் கல்வித் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். மத்திய வீட்டு வசதித் துறையின், 'ஸ்வாபிமான்' திட்டத்தின் கீழ், புதுடில்லி அசோக் விஹாரில் குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீட்டின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி, துப்புரவுப் பணியாளர்களுக்கு வீட்டு சாவியை வழங்கி பேசியதாவது:நாடு முழுதும் ஏழைகளுக்கு இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளேன். ஆனால், எனக்காக ஒரு வீடு கட்டிக்கொண்டது இல்லை. நினைத்திருந்தால் பிரமாண்ட கண்ணாடி மாளிகையையே எனக்காக கட்டியிருக்க முடியும்.கடந்த 10 ஆண்டுகளாகவே டில்லி மிகப் பெரிய பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி சில மோசமான, நேர்மையற்றவர்கள், டில்லியை குழிக்குள் தள்ளி விட்டனர். டில்லி மாநகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால், டில்லி அரசு பொய் பிரசாரத்துடன் பள்ளிக்கல்வித் துறை முதல் அனைத்து துறைகளையும் நாசப்படுத்தி வைத்திருக்கிறது. டில்லி அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் டில்லியைச் சூழ்ந்துள்ள பேரழிவில் இருந்து காப்பாற்ற போர் துவக்கியுள்ளோம். டில்லி மக்கள் இந்தப் போருக்கு தோள் கொடுத்து, தேர்தலில் ஆம் ஆத்மியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.இந்தப் புத்தாண்டில், தேசத்தை கட்டியெழுப்பும் மற்றும் மக்கள் நலன் சார்ந்த புதிய அரசியலை பா.ஜ., அறிமுகப்படுத்தும். எனவே, பேரழிவு சக்தியை அகற்றி, பா.ஜ.,வை ஆட்சி பீடத்தில் அமர வைக்க டில்லி மக்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -