புனே: மஹாராஷ்டிராவில் மோசடி வழக்கில் தேடப்பட்ட நபர், முன்ஜாமின் பெற நீதிபதியின் கையெழுத்திட்ட போலி உத்தரவை சமர்ப்பித்து தப்பிய நிலையில், போலீசார் அவரை தேடி வருகின்றனர். மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த சி.டி.ஆர்., நிறுவனம், ஆடை வடிவமைப்பு மற்றும் டிசைனிங் பணிகளில் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனம் உருவாக்கிய டிசைனிங் படங்களை, சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று பயன்படுத்தியதாக, 2022ல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சி.டி.ஆர்., நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். அவர்களின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்த்ததுடன், கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கினர். இதற்கிடையே, அந்த நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு துறை அதிகாரியான செம்டேவின் பெயரும் புகாரில் இருந்ததை அடுத்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர். இதையறிந்த அவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான விசாரணையின் போது, மாஜிஸ்திரேட் ஒருவரின் கையொப்பமிட்ட போலி ஜாமின் உத்தரவை கடந்த ஜனவரியில் உயர் நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார். செம்டேவிற்கு ஜாமின் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தலைமறைவானார். இதையடுத்து, செம்டே மீது ஏற்கனவே புகார் அளித்த சி.டி.ஆர்., நிறுவன அதிகாரிகள், அவர் தலைமறைவானது குறித்து போலீசில் தெரிவித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர் சமர்ப்பித்த முன்ஜாமின் உத்தரவை சரிபார்த்த போது, அது போலி என தெரியவந்தது. இதையடுத்து, செம்டே மீது புதிய வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர்.