உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் நான் சிறையில் அடைக்கப்படலாம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சால் பரபரப்பு

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் நான் சிறையில் அடைக்கப்படலாம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சால் பரபரப்பு

கொல்கட்டா: “உச்ச நீதிமன்ற உத்தரவை நான் ஏற்கவில்லை. வேலையிழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசுவதால், என்னை சிறையில் அடைத்தாலும் கவலையில்லை,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2016ல் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

கவலை இல்லை

அப்போது, முதல்வராக மம்தா பானர்ஜி இருந்த நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி கல்வி அமைச்சராக பதவி வகித்தார்.இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கட்டா உயர் நீதிமன்றம், 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நியமனங்களை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்து, கடந்த 3ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கொல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில் நேற்று, தலைநகர் கொல்கட்டாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில், உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டோரை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது, முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டதாக நினைக்க வேண்டாம். உங்களின் வேதனையை பார்க்கும் போது, என் இதயம் வலிக்கிறது. நாங்கள் கல் மனம் படைத்தவர்கள் அல்ல. உங்களுக்கு ஆதரவாக பேசுவதால், நான் சிறையில் கூட அடைக்கப்படலாம். அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது, நாம் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

போராட்டம்

உச்ச நீதிமன்ற உத்தரவால் வேலையிழந்த தகுதியான நபர்களுக்கு, மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக, எங்களிடம் ஒரு புதிய திட்டம் உள்ளது. நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, இந்த முறைகேட்டில் தொடர்புஉடையதாகக் கூறி, முதல்வர் மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajan A
ஏப் 08, 2025 06:46

ஊழல் செய்தால் கைது நிச்சயம் என்று பதறுகிறார். அடுத்த ஆத்ட் வீல் சேர் தான். இங்கு வந்து நல்லா பாடம் கற்று போயிருக்கலாம்