புதுடில்லி:கேரள திரையுலகை சேர்ந்த நடிகையர் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து விரிவாக விளக்கி உள்ள நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கும்படி கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு விதித்துள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தை சேர்ந்த திரைப்பட நடிகையர் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.இந்த அறிக்கையின் ஒரு பகுதியை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், திரைப்பட வாய்ப்புகளுக்காக நடிகையர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதை கமிட்டி உறுதி செய்தது. பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.இதை தொடர்ந்து, தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து மலையாள திரைப்பட நடிகையர் பொதுவெளியில் புகார் தெரிவிக்க துவங்கினர். போராட்டம்
இதன் அடிப்படையில், பிரபல மலையாள திரைப்பட நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ.,வுமான முகேஷ் மீது, ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும், பிரபல நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, மணியன்பிள்ளா ராஜு, இடவேளா பாபு மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.இதை தொடர்ந்து மாநிலம் முழுதும், எதிர்க்கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான முகேஷ் பதவி விலக வலியுறுத்தி, மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் கொச்சியிலும், கொல்லத்திலும் நேற்று பேராட்டத்தில் ஈடுபட்டனர்.கொச்சியில், முகேஷ் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர்களின் கொடும்பாவியை பெண்கள் எரித்ததுடன், துடைப்பத்தால் அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கொல்லத்தில் உள்ள முகேஷின் வீட்டை சூழ்ந்த பெண்கள், அவரை பதவி விலக கோரி கோஷம் எழுப்பினர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறியதாவது:நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின், முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கிறார். அவரை பொது வெளியில் காண முடிவதில்லை.பாதிக்கப்பட்ட பெண்களே தைரியமாக வந்து புகார் அளித்த பின்னும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது விரக்தி அளிக்கிறது.எம்.எல்.ஏ., பதவியை முகேஷ் ராஜினாமா செய்யவேண்டும் என்பதை கட்சி தான் வலியுறுத்த வேண்டும். ஆனால், ஆளுங்கட்சிக்குள் இருக்கும் அதிகார மையத்தினால் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். கெடு
இதற்கிடையே, நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் வெளியிடாமல் ஆளுங்கட்சி சூழ்ச்சி செய்வதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக கேரள பா.ஜ.,வை சேர்ந்த சந்தீப் வச்சஸ்பதி, பி.ஆர்.சிவசங்கரன் ஆகியோர் தேசிய மகளிர் கமிஷனில் புகார் அளித்தனர்.இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட தேசிய மகளிர் கமிஷன், நீதிபதி ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கும்படி கேரள அரசுக்கு கெடு விதித்துள்ளது.
இரண்டாவது வழக்கு
திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை, 2012 - 13 காலகட்டத்தில், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் படப்பிடிப்பில் இருந்தபோது, நடிகர் ஜெயசூர்யா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, திருவனந்தபுரத்தின் கரமனா போலீஸ் ஸ்டேஷனில், நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டது.
'ஒத்துழைக்க தயார்'
கொல்லம் எம்.எல்.ஏ.,வான நடிகர் முகேஷ், திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி நோக்கி நேற்று காரில் புறப்பட்டார். அவர், சிறப்பு விசாரணைக்குழு முன் விசாரணைக்கு ஆஜராக செல்வதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின், கொச்சியில் உள்ள தன் வழக்கறிஞர் ஜியோ பாலை சந்திக்க செல்வதாக தெரியவந்தது.இது குறித்து வழக்கறிஞர் ஜியோ பால் கூறுகையில், “முகேஷிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு சம்மன் எதுவும் அளிக்கவில்லை. அவரை கைது செய்வதால் வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளார்,” என்றார்.
இயக்குனர் ராஜினாமா!
நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை தொடர்பாக, கேரள திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பின் பொது செயலர் பி.உன்னிகிருஷ்ணன் மவுனம் காத்து வருவது திரைத்துறையில் பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.இதனால் விரக்தி அடைந்த பிரபல இயக்குனர் ஆஷிக் அபு, இயக்குனர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். 'சமூக பொறுப்பற்ற வகையில் இயங்கும் சங்கத்தில் தொடர விரும்பவில்லை' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.