உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது சொத்துக்களை சேதப்படுத்தியது யார்? மராத்தா சமூக ஆர்வலர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

பொது சொத்துக்களை சேதப்படுத்தியது யார்? மராத்தா சமூக ஆர்வலர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

மும்பை : மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது, பொது சொத்துக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் மராத்தாக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் துறையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி, கடந்த மாதம் 29ம் தேதி தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். ஆக்கிரமிப்பு ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடஒதுக்கீடு சலுகைகள், தகுதி வாய்ந்த மராத்தாக்களுக்கு கிடைக்கும் வகையில், அவர்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெற்கு மும்பையின் பல்வேறு பகுதிகளில் ஜராங்கேவின் ஆதரவாளர்கள் குவிந்தனர். ஆசாத் மைதானம் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் கட்டடங்களையும் ஆக்கிரமித்தனர். இதனால், தெற்கு மும்பை முழுதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு , மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு, இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், தெற்கு மும்பையில் இருந்து வெளியேற வேண்டும் என ஜராங்கேவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் உத்தரவிட்டது. அதே சமயம் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக மஹாராஷ்டிரா அரசு அறிவித்ததால், ஐந்து நாளாக நடந்த போராட்டம் நேற்று முன் தினம் மாலை முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தெற்கு மும்பையில் இருந்து ஜராங்கேவின் ஆதரவாளர்களும் கலைந்து சென்றனர். இந்நிலையில், ஜராங்கேவின் போராட்டம் குறித்து தொடரப்பட்ட வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி ஆர்த்தி சாதே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜராங்கே தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'ஐந்து நாள் போராட்டத்தின் போது, பொது சொத்துக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? யார் நிவாரணத் தொகை வழங்குவது?' என கேள்வி எழுப்பினர். இடையூறு அப்போது ஜராங்கே தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில், ஆதரவாளர்கள் நடந்து கொள்ளவில்லை என்றும், போராட்டத்தால் சாமான்ய மக்களுக்கு இடையூறு மட்டுமே ஏற்பட்டது என்றும் விளக்கினர். எனினும் இதை ஏற்காத நீதிபதிகள், ஜராங்கே மற்றும் அவரது அமைப்பு சார்பில் இது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கோரிஉத்தரவிட்டனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜராங்கேவும் அவரது ஆதரவாளர்களும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை என்பதை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும். வன்முறைகளுக்கு பின்னணியில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால், ஜராங்கேவும், அவரது ஆதரவாளர்களும் தான் வன்முறையை துாண்டி விட்டவர்கள் என்ற முடிவுக்கு வருவோம். எனவே, இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் ஜராங்கேவும், அவரது குழுவினரும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஓ.பி.சி.,க்கள் கடும் எதிர்ப்பு

மராத்தாக்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக ஆர்வலர் லஷ்மண் ஹக்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மராத்தாக்களுக்கு குன்பி ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான கோரிக்கையை ஏற்கும் உரிமை மஹாராஷ்டிரா அரசுக்கு இல்லை. ஒருவேளை வழங்க முடிவெடுத்தால், ஓ.பி.சி., யினர் அனைவரும் ஒன்றாக இணைந்து தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவோம். மராத்தாக்கள் சமூக ரீதியாக பின் தங்கியவர்கள் என எந்த அரசிதழிலும் குறிப்பிடவில்லை. பன்ஜாராக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, ஹைதராபாத் அரசிதழ் கூறுகிறது. அதன்படி அரசு அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி விடுமா? ஒரு பிரச்னையை தீர்க்க, 10 பிரச்னைகளை உருவாக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை