உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அந்தமானில் பிடிபட்ட போதை பொருள் யாருடையது?

அந்தமானில் பிடிபட்ட போதை பொருள் யாருடையது?

புதுடில்லி, அந்தமான் - நிக்கோபார் தீவில், 5,500 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட நபர்களின் சேட்டிலைட் போன் வாயிலாக, கடத்தல்காரர்களின் தகவல்களை பெற போலீசார் முயற்சித்து வருகின்றனர். இந்த போதைப் பொருள், தாய்லாந்தில் உள்ள பிரபலமான கும்பலுக்கு கடத்தப்பட இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24ல், சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த மீன்பிடி படகில், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 5,500 கிலோ எடையுள்ள, 'மெத் ஆம் பெட்டமைன்' என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த நம் அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சேட்டிலைட் போன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து, அந்தமான் போலீசார் கூறியதாவது:போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய நபர், அதை பெறக் கூடிய நபர் பற்றிய தகவல்களை தெரிவிக்க, கைது செய்யப்பட்ட நபர்கள் பயப்படுகின்றனர். எது கேட்டாலும் தெரியாது என்றே அவர்கள் பதில் அளிக்கின்றனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேட்டிலைட் போன் வாயிலாக, கடத்தல்காரர்களின் விபரங்களை பெற முயற்சித்து வருகிறோம். விரைவில் இதில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படுவர்.எங்களுக்கு கிடைத்துஉள்ள முதல் கட்ட தகவலின்படி, தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தைச் சேர்ந்த கும்பலுக்கு இந்த போதைப் பொருள் கடத்தப்பட இருந்ததாக தெரிய வந்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கஉள்ளதால், தாய்லாந்தில் போதை பொருட்களுக்கு கடுமையான கிராக்கி நிலவுகிறது. இதையொட்டியே, இந்த போதைப் பொருள் மீன்பிடி படகு வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சர்வதேச கடத்தல் கும்பல்

இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த, 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' மற்றும் அதே நாட்டைச் சேர்ந்த, 'எல் சாபோ' ஆகிய கும்பல்களுக்கு தொடர்புஉள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு கும்பல்களும் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலுக்கு பிரபலமானவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி