துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜக்தீப் தன்கர், 74, விலகியது, தேசிய அரசியலில் 'ஹாட் டாப்'பிக்காக உள்ளது. 'மருத்துவ காரணங்களுக்காகவே அவர் ராஜினாமா செய்தாரா அல்லது வற்புறுத்தப்பட்டாரா?' என, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அடுக்கடுக்கான காரணங்களை டில்லி வட்டாரங்கள் முன் வைக்கின்றன. கடந்த 21ல், பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளே, துணை ஜனா திபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகித்த அவர், கூட்டத்தொடரின் முதல் நாளில் வழக்கம் போல சபை நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், அன்று இரவே திடீரென ராஜினாமா செய்தது, டில்லி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. பி ரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின், 'குட் புக்'கில் இடம் பெற்றிருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் பேசு பொருளானது. பா.ஜ.,வில் சேர்வதற்கு முன்னரே, 1980களில் இருந்து நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஜக்தீப் தன்கருக்கு தொடர்பு உள்ளது. வழக்கறிஞராக பணியை துவங்கிய ஜக்தீப் தன்கர், திறம்பட வாதாடக்கூடியவர். இதை பார்த்து வியந்த அப்போதைய துணை பிரதமர் தேவி லால், 1989 லோக்சபா தேர்தலில், ஜாட் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு தொகுதியில், ஜனதா தளம் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.இதில் ஜக்தீப் தன்கர் வெற்றியும் பெற்றார். 1990களில், காங்கிரசில் சேர்ந்த அவர், 1993ல், எம்.எல்.ஏ., ஆனார்; 10 ஆண்டுகளுக்கு பின், பா.ஜ.,வில் இணைந்தார். மேற்கு வங்கத்துக்கு புதிய கவர்னரை மோடி அரசு தேடிய போது, ஜக்தீப் தன்கரை நியமிக்கும்படி, ஆர்.எஸ்.எஸ்., பரிந்துரை செய்தது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒப்புதல் அளித்தார். பாராட்டு
இதன்படி, 2019ல் மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்ட ஜக்தீப் தன்கர், திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு எந்தளவுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு கொடுத்தார். சொல்லப் போனால், ஒரு பிரதான எதிர்க்கட்சி போலவே அவர் செயல்பட்டார். இதனால் பா.ஜ., மேலிடத்தின் பாராட்டுகளை பெற்றார். துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிந்த பின், பா.ஜ., மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயர், அந்த இடத்துக்கு பரிசீலிக்கப்பட்டது. இதையறிந்த ஆர்.எஸ்.எஸ்., தலைமை, துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தன்கரை நியமிக்கும்படி பரிந்துரை செய்தது. இதன்படியே, 2022ல் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், மோடி அரசின் முக்கிய கொள்கைகளை ஜக்தீப் தன்கர் மீறினார். அதாவது, 'முக்கிய பிரச்னைகளை பற்றி அரசை மீறி பேசக் கூடாது' என்ற கொள்கையை மீறினார். பா.ஜ.,வை பொறுத்தவரை பிரதமர் மோடியே அதிகார மையம். எந்தவொரு முக்கிய பிரச்னையாக இருந்தாலும் அவர் தான் பேசுவார். இல்லை எனில், அவரது அறிவுறுத்தலின்படி, அமித் ஷா பேசுவார். மற்றபடி, மத்திய அமைச்சர்கள் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால், இந்த முக்கிய கொள்கையை மீறிய ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதி பதவி அரசியலமைப்பு சட்டப் பதவி எனக் கூறி, பல்வேறு முக்கிய பிரச்னைகளில் கருத்து தெரிவித்தார். அதிரடி கருத்து
ஒருசில நேரங்களில் பா.ஜ.,வுக்கு இது பலனளித்தாலும், பெரும்பாலும் வினையாகவே இருந்ததால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கடுப்பாகினர். மேலும், வழக்கறிஞராக இருந்ததால் என்னவோ, நீதித்துறையை ஜக்தீப் தன்கர் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அதிரடியாக கருத்துக்களை தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் ஒரு முக்கிய பிரமுகரை சந்தித்து, 'நீதித்துறையை துணை ஜனாதிபதி ஏன் கடுமையாக விமர்சனம் செய்கிறார். 'இது அரசுக்கும், நீதித்துறைக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்' என, புகார் தெரிவித்தனர். மேலும், 'தன்கர் பேசுவது தான் அரசின் நிலைப்பாடா?' எனவும் கேட்டனர். இதை மத்திய அரசு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு நிலைமை கைமீறி சென்று கொண்டிருந்த நேரத்தில் தான், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஜக்தீப் தன்கர் ஏற்றுக்கொண்டார். இதனால் பா.ஜ., மேலிடம் எரிச்சலடைந்தது. இதனாலேயே, அவர் கூட்டிய அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் நட்டா, கிரண் ரிஜிஜு புறக்கணித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், எப்போதும் மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்கு செல்லும் வழக்கம் இல்லாத ஜக்தீப் தன்கர், அன்றைய தினம் வீட்டுக்கு சென்று, எதிர்க்கட்சி எம்.பி.,யை வரவழைத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வுக்கு எதிரான தீர்மானத்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் எல்லாம், பா.ஜ., மேலிடத்தை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றன. தனக்கு எதிராக ஆளுங்கட்சி ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக வெளியான தகவல், ஜக்தீப் தன்கரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓரங்கட்டப்படுவதை அறிந்த அவர், உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் குட் புக்கில் இடம் பெற்ற ஜக்தீப் தன்கர், அதை பராமரிக்க தவறியதே துணை ஜனாதிபதி பதவியை இழக்க காரணம் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பா.ஜ., மேலிடத்தை கடுப்பேற்றிய சில சம்பவங்கள்
டில்லியில் நடந்த பல்வேறு, 'லஞ்ச்' மற்றும், 'டின்னர் பார்ட்டி'களில் பங்கேற்ற தன்கர், மோடி, அமித் ஷா பற்றி எதிர்க்கட்சி எம்.பி.,க்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.மத்திய அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் புகைப் படம் இருப்பது போல, தன் படமும் இருக்க வேண்டும் என, தன்கர் பலமுறை சுட்டிக்காட்டி பேசினாராம் .தன், 35 மாத பதவிக் காலத்தில் நான்கு முறை மட்டுமே வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாகவும், தனக்கு வெளியுறவு அமைச்சகம் முக்கியத்துவம் தரவில்லை என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் புதுடில்லி வந்த போது, துணை ஜனாதிபதி என்ற முறையில் அவரை சந்தித்தே தீருவேன் என, தன்கர் பிடிவாதம் பிடித்ததாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. தன் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தையும், 'மெர்சிடிஸ் பென்ஸ்' கார்களாக மாற்றும்படி, அவர் பல முறை அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில், 'சன்சத் டிவி'யின் செயலராக இளம் அதிகாரியை நியமிக்க ஜக்தீப் தன்கர் விரும்பினார். ஆனால் அரசு விரும்பவில்லை. இதிலும் அவருக்கு, அரசுடன் முரண்பாடு இருந்தது.
திறமையான வழக்கறிஞர்
வழக்கறிஞராக பணியை துவங்கிய ஜக்தீப் தன்கர், திறம்பட வாதாடக்கூடியவர். இதை பார்த்து வியந்த அப்போதைய துணை பிரதமர் தேவி லால், 1989 லோக்சபா தேர்தலில், ஜாட் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு தொகுதியில், ஜனதா தளம் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கினார். இதில் ஜக்தீப் தன்கர் வெற்றியும் பெற்றார். 1990களில், காங்கிரசில் சேர்ந்த அவர், 1993ல், எம்.எல்.ஏ., ஆனார்; 10 ஆண்டுகளுக்கு பின், பா.ஜ.,வில் இணைந்தார். எனினும், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, ஜக்தீப் தன்கருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் வழக்கறிஞர் பணிக்கு மீண்டும் திரும்பிய ஜக்தீப் தன்கர், உச்ச நீதிமன்றத்தில், நிலக்கரி, சுரங்கம் போன்ற விவகாரங்களில் சிறப்பாக வாதாடினார். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., தலைமை உடன் அவருக்கு தொடர்பு கிடைத்தது. 2010 அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் இந்திரேஷ் குமாருக்காக, நீதிமன்றத்தில் ஜக்தீப் தன்கர் வாதாடினார். இது, ஆர்.எஸ்.எஸ்., உடன் நெருக்கத்தை அதிகரிக்க செய்தது.- நமது சிறப்பு நிருபர் -