அரசு மருத்துவமனைக்கு செல்லாதது ஏன்? முதல்வர் சித்தராமையா விளக்கம்
பெங்களூரு: ''நான் உட்பட எந்த அரசியல்வாதியும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. பணம் இருப்போர் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை பெறுவர்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனை வளாகத்தில் நேற்று 500 படுக்கை வசதி கொண்ட, புதிய மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கலை முதல்வர் சித்தராமையா நாட்டினார்.அவர் பேசியதாவது:நோயை குணப்படுத்தும் டாக்டரை, மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர். நோயாளிகளை கவனமாக டாக்டர்கள் கண்காணிக்க வேண்டுமே தவிர, அலட்சியம் காட்டக்கூடாது. கிராமப்புற மாணவர்கள் டாக்டரானால் தான், அரசின் ஆசை நிறைவேறும்.பவுரிங் மருத்துவமனைக்கு நீண்ட வரலாறு உள்ளது. பல ஆயிரம் மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துள்ளது.இதற்கு முன்பு நான் முதல்வராக இருந்தபோது, வளர்ந்து வரும்பெங்களூரை கருத்தில் கொண்டு, மருத்துவ கல்லுாரி கட்ட அனுமதி அளித்தேன். தற்போது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படஉள்ளது. இதனால் ஏழை, குறிப்பிட்ட சமூகத்தினர் பயனடைவர்.அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பணக்காரர்கள் அல்ல. ஏழை, சாதாரண மக்கள் தான் இங்கு வருவர். தனியார் மருத்துவமனைகளில், அதிக பணம் கொடுத்து அவர்களால் சிகிச்சை பெற முடியாது.நான் உட்பட எந்த அரசியல் வாதியும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. பணம் இருப்போர் எங்கு வேண்டுமானாலும் சென்று சிகிச்சை பெறுவர்.நான் டாக்டராக வேண்டும் என்று எனது தந்தை விரும்பினார். என்னால் நல்ல மதிப்பெண்பெற முடியாததால், வழக்கறிஞராகி விட்டேன். மருத்துவராகி இருந்தால், முதல்வராகி இருக்கமாட்டேன்.நான் நிதி அமைச்சராக இருந்தபோது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என தீர்மானித்தேன். தற்போது 22 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.