சென்னை: 'புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2025 - -2026ம் ஆண்டுக்கு, தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சேர்க்கை, இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையை சேர்ந்த வே.ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kxmfqfd2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2025 - -2026ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை துவங்குவது தொடர்பாக, ஏப்.22, 30 மற்றும் மே.8ல் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலித்து, மாணவர் சேர்க்கையை துவங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கேட்டிருந்தார்.மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விபரங்களை சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். புதிய கல்விக் கொள்கை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகையை மத்திய அரசு ஒதுக்கவில்லை. பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை, என்றார்.தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது, மத்திய அரசின் 'பெரியண்ணன்' மனப்பான்மையை காட்டுகிறது, என்றார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். மேலும், 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, வரும் 28ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விபரங்களையும், தமிழக அரசு தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.