உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோமா? பஞ்சமசாலி சமுதாய காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் பீதி!

அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோமா? பஞ்சமசாலி சமுதாய காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் பீதி!

கர்நாடக சட்டசபை தேர்தலில், வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் எந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் லிங்காயத் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த சமூக மடாதிபதிகளுடன் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. இதனால் லிங்காயத் சமூகம் பா.ஜ., வை முழுமையாக ஆதரித்து வந்தது.

போராட்டம்

இந்நிலையில், லிங்காயத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு 2ஏ இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2022ம் ஆண்டு பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது கோரிக்கை வைத்தனர். இதை நிறைவேற்ற அப்போதைய முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பெங்களூரில் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். பா.ஜ., ஆட்சி காலம் முடியும் நேரத்தில் 2டி இடதுக்கீடு கொடுத்தனர். ஆனால், அதை பஞ்சமசாலி சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை.இந்நிலையில், பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், மடாதிபதி பசவஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமியை சந்தித்து, சட்டசபை தேர்தலில் காங்கிரசை ஆதரித்தால், 2ஏ இட ஒதுக்கீடு வாங்கி தருவதாக கூறினர். இதனால் மடாதிபதி கூறியதன்படி, பஞ்சமசாலி சமூகத்தினர் காங்கிரசை ஆதரித்தனர். இதனால், கடந்த சட்டசபை தேர்தலில் வட மாவட்டங்களில் காங்கிரஸ் வரலாற்று வெற்றியை பெற்றது. பஞ்சமசாலி சமூகத்தை சேர்ந்த 20 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களாக வெற்றி பெற்றனர். இவர்களில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், லட்சுமண் சவதி, விஜயானந்த் காசப்பனவர் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் 2ஏ இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மடாதிபதி தலைமையில் பஞ்சமசாலி சமூகத்தினர், முதல்வரை நான்கு முறை சந்தித்து பேசியும் எதுவும் நடக்கவில்லை.

மன்னிப்பு

இதனால், கோபம் அடைந்த மடாதிபதி, சுவர்ண விதான் சவுதாவில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரின் போது டிராக்டர் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 10ம் தேதி வட மாவட்டங்களை சேர்ந்த பஞ்சமசாலி சமூகத்தினர் டிராக்டர்களில் சுவர்ண விதான் சவுதாவை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆனால், எல்லை பகுதியில் டிராக்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் போராட்ட குழுவின் ஒரு பகுதியினர், சுவர்ண விதான் சவுதாவில் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் மடாதிபதியை மேலும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. தடியடி நடத்தியதற்கு முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மடாதிபதி வலியுறுத்தி வருகிறார். ஆனால், தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்வர் திட்டவட்டமாக கூறி விட்டார்.

பா.ஜ., உற்சாகம்

'இனி இட ஒதுக்கீடு கேட்டு முதல்வரை சந்திக்க மாட்டோம். எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் கட்சியை அடுத்த சட்டசபை தேர்தலில் தேர்ந்தெடுப்போம்' என, மடாதிபதி கூறியுள்ளார். அதாவது பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க போவதை சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால், பா.ஜ., தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த முறை பா.ஜ., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பஞ்சமசாலி சமூக தலைவர்கள், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலையை இப்போது இருந்தே ஆரம்பித்துள்ளனர். அதே நேரம், காங்கிரஸ் பஞ்சமசாலி எம்.எல்.ஏ.,க்களுக்கு அடுத்த தேர்தலில் நமது நிலை என்ன என்று இப்போது இருந்தே கிலி ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சமசாலி சமூக தலைவர்கள், வேறு மடாதிபதிகளை தொடர்பு கொண்டு தங்களை ஆதரிக்கும்படி இப்போது இருந்தே கேட்க ஆரம்பித்துள்ளனர். -- நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை