செவிலியர்கள் போல நடித்து குழந்தையை கடத்திய பெண்கள்
கலபுரகி : கலபுரகி அரசு மருத்துவமனையில், செவிலியர் போல நடித்து, பிறந்த குழந்தையை கடத்தி சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கலபுரகி சிஞ்சோலி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா - கஸ்துாரி தம்பதி. பிரசவத்திற்காக கலபுரகி மாவட்ட மருத்துவமனையில் கஸ்துாரி அனுமதிக்கப்பட்டார். கடந்த 25ம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில், ஆண் குழந்தை பிறந்தது.தாயும், குழந்தையும் வார்டிற்கு மாற்றப்பட்டனர். சிறிது நேரத்தில், அங்கு வந்த இரண்டு பெண்கள், 'நாங்கள் செவிலியர்கள். குழந்தைக்கு ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். குழந்தையை தாருங்கள்' என கூறி வாங்கினர்.சில மணி நேரம் கடந்தும், குழந்தையை அவர்கள் கொண்டு வரவில்லை. சந்தேகமடைந்த தந்தை, டாக்டர்களிடம் விசாரித்தார். அவர்களோ, ரத்த பரிசோதனை செய்ய குழந்தையை கேட்கவில்லையே என்றவுடன், குழந்தையின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். மருத்துவமனை முழுதும் குழந்தையை தேடினர். ஆனால், அவர்களை எங்கும் காணவில்லை. இதன் பின்னரே, செவிலியர் போல நடித்து, குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து பிரம்மாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவமனை வந்த போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை இரு பெண்கள் எடுத்து செல்வது தெரிந்தது. ஆனால், இருவரும் தங்கள் முகத்தை மறைந்திருந்தனர். இரு பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.