உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் முதல்வர் வேட்பாளர் யார் என தெரியாமல் போட்டியிட மாட்டோம்; தேஜஸ்வி யாதவ் அடம்

பீஹாரில் முதல்வர் வேட்பாளர் யார் என தெரியாமல் போட்டியிட மாட்டோம்; தேஜஸ்வி யாதவ் அடம்

பாட்னா; முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி இருக்கிறார்.பீஹாருக்கு எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம். அதற்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியும் தயாராக உள்ளன. தேர்தல் பிரசாரங்களில் இரு கூட்டணிகளின் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.தேசிய ஜனநாயக கூட்டணியை விட, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் இல்லாத சூழல் காணப்படுகிறது. மேலும் தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடையே இன்னமும் ஒருமித்த கருத்து எட்டாத சூழலே நிலவுகிறது.எத்தனை தொகுதிகளில் போட்டி? வேட்பாளர்கள் யார்? பிரசார உத்திகள் என்ன? போன்ற விஷயங்களில் காங்கிரஸ் மற்றும் அதனுடன் இணைந்துள்ள கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி காணப்படுகிறது. தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதே அதற்கு காரணம்.இந் நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் இண்டி கூட்டணி போட்டியிடாது என்று தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது; எந்த முகமும் இல்லாத பாஜ அல்ல நாங்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். முதல்வரை மக்கள்தான் தேர்வு செய்வார்கள் என்றார்.இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், முதல்வரோ அல்லது அரசாங்கமோ இப்போது முக்கிய விஷயம் கிடையாது. பீஹாரை கட்டமைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.தொடர்ந்து அவர் கூறுகையில், தொகுதி பங்கீடு முடிந்தவுடன், இந்த பிரச்னை (முதல்வர் வேட்பாளர்) தீர்க்கப்படும். முதல்வர் முகம் இல்லாமல் போட்டியிட மாட்டோம் என்றும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
செப் 21, 2025 10:13

நீங்கள் போட்டி இட அவசியமே இல்லை, தேஜஸ்வி மீண்டும் முதல்வராகப் போவது - நிதிஷ் குமார் தான்