| ADDED : டிச 26, 2025 05:01 PM
புதுடில்லி: ''பெரிய கனவுகளை காணுங்கள். கடினமாக உழையுங்கள். தன்னம்பிக்கையை ஒரு போதும் தளர்ந்துவிட அனுமதிக்காதீர்கள். இது தான் இந்திய இளைஞர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன்,'' என பிரதமர் மோடி கூறினார்.வீர் பால் திவாஸ் தினத்தை முன்னிட்டு டில்லி பாரத மண்டபத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரம் பெற்ற பிறகும் கூட அடிமை மனப்பான்மையில் இருந்து நம்மால் விடுபட முடியவில்லை. இந்த மனப்பான்மைக்கான விதைகள் 1835 ல் ஆங்கிலேயரான மெக்காலேவால் விதைக்கப்பட்டன. பல உண்மைகள் வேண்டும் என்றே மறைக்கப்பட்டன. இன்று இந்தியா இந்த மனப்பான்மையில் இருந்து தன்னை விடுவித்துக் காள்ள முடிவு செய்துள்ளது. நமது நாயகர்கள் இனி புறக்கணிக்கப்ப மாட்டார்கள். அதனால் தான் வீர பால் திவால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மெக்காலேவின் சதித்திட்டம் நிறைவடைந்து 200 ஆண்டுகள் ஆகும் 2035ம் ஆண்டுக்குள் அடிமை மனப்பான்மையில் இருந்து நாட்டை விடுவிக்க நமக்கு பத்து ஆண்டுகள் உள்ளன. இதுவே 140 கோடி இந்தியர்களின் உறுதியான சங்கல்பமாக இருக்க வேண்டும். நீங்கள் இளம் தலைமுறையினர். உங்கள் தலைமுறைதான், நாட்டை, வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிகொண்டு செல்ல வேண்டும். உங்களின் பலம் மற்றும் திறமையை பார்க்கும் போது உங்கள் மீது நான் வைத்து இருக்கும் நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது. பெரிய கனவுகளை காணுங்கள். கடினமாக உழையுங்கள். தன்னம்பிக்கையை ஒரு போதும் தளர்ந்துவிட அனுமதிக்காதீர்கள். இது தான் இந்திய இளைஞர்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது. இந்தியாவின் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருந்தால் தான் இந்தியாவின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும். அவர்களின்தைரியம், அவர்களின் திறமை, மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆய்வகங்களில் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு ரோபாடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, நிலைத்தன்மை மற்றும் வடிவமைப்புச் சிந்தனை ஆகியன அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த முயற்சிகளுடன் தாய் மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பை தேசிய கல்விக்கொள்கை வழங்குகிறது. இது குழந்தைகளுக்கு கற்றலை எளிதாக்குகிறது மற்றும் பாடங்களை புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவுகிறது.முன்பு இளைஞர்கள் கனவு காணவே அஞ்சினார்கள். பழயை அமைப்பில் எந்த நல்லதும் நடக்காது என்பது போன்ற ஒரு சூழலை உருவாக்கியிருந்தன. எங்கும் விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலையே நிலவியது. கடினமாக உழைப்பதில் என்ன பயன் என்று மக்கள் நினைக்கத் துவங்கினர். ஆனால், இன்று நாடு திறமைகளை தேடி பிடித்து அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. 140 கோடி நாட்டு மக்களின் பலம் அவர்களின் கனவுகளுக்கு பின்னால் உள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் வெற்றியால் இணையத்தின் சக்தி உங்களிடம் இருக்கிறது. உங்களிடம் கற்பதற்கான வளங்கள் உள்ளன. அறிவியல் , தொழில்நுடபம் மற்றும் ஸ்டார்ட் அப் துறைகளில் நுழைய விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட் ஆப் இந்தியா போன்ற திட்டங்கள் உள்ளன. விளயைாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேலோ இந்தியா திட்டம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.