உலகின் முதல் இலவச ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை; புட்டபர்த்தி மருத்துவமனை புதிய சாதனை
புட்டபர்த்தி: ஆந்திராவின் புட்டபர்த்தியில் உலகின் முதல் இலவச ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது, பெரும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.1991ம் ஆண்டு நவ.22ம் தேதி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் ஸ்ரீசத்யசாய் உயர் மருத்துவ அறிவியல் கழகம் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு, சிறுநீரகம், கண் மருத்துவம், பிளாஸ்டிக் சர்ஜரி, இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அறிவியல் கழகத்தில் அண்மையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் ரூ. 8 கோடி மதிப்பிலான ரோபோடிக் கருவிகள் நிறுவப்பட்டன. இந்த நவீன வசதியை பயன்படுத்தி, உலகின் முதல் இலவச ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை தற்போது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு உள்ளது.டாக்டர் சுதிர் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளி ஒருவருக்கு ரோபோடிக் கருவிகளைக் கொண்டு இதய அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர்.இதுகுறித்து, ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் கூறி உள்ளதாவது; பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அருளால் ஸ்ரீசத்யசாய் உயர் மருத்துவ அறிவியல் கழகத்தில் உயர்ரக ரோபோடிக் கருவிகள் பொருத்தப்பட்டன. சுயசார்பு இந்தியா என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த கருவிகள் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டவை ஆகும். வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இதற்கான உற்பத்தி செலவு என்பது வெகு குறைவே.இந்த புதிய அதி நவீன வசதிகள் கொண்ட ரோபோடிக் கருவிகள் மூலம் மருத்துவர் சுதிர் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான குழுவினர், நோயாளி ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இது உலகின் முதல் இலவச ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை ஆகும்.இந்த தொழில்நுட்பம் மூலமாக, உலகின் எந்த மூலையில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், புட்டபர்த்தியில் உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இவ்வாறு ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தெரிவித்தார். அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் சுதிர் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது; நான் புட்டபர்த்திக்குத் திரும்பி வர விரும்புகிறேன் என சுவாமியிடம் அடிக்கடி தெரிவிப்பேன். எனக்குத் தேவைப்படும்போது உங்களை அழைப்பேன் என்று அவரும் கூறுவார். இன்று அந்த அழைப்பு ஈடேறி இருப்பதாக நான் கருதுகிறேன்.இத்தகைய நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகில் எங்கு இருந்தாலும் அங்கிருந்தே நிபுணர்கள் புட்டபர்த்தியில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இவ்வாறு மருத்துவர் சுதிர் ஸ்ரீவஸ்தவா கூறினார்.சாய்பாபாவின் தீவிர பக்தரான சுதிர் ஸ்ரீவஸ்தவா, ஹரியானாவில் இருந்து புட்டபர்த்திக்கு நேரில் வந்து இந்த முதல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.