உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுதங்களை கைவிட்டால் தப்புவீர்: மத்திய உள்துறை அமைச்சர்

ஆயுதங்களை கைவிட்டால் தப்புவீர்: மத்திய உள்துறை அமைச்சர்

புதுடில்லி: ''ஆயுதங்களை கீழே போடுங்கள்; போலீசார் உங்களை நோக்கி ஒருமுறை கூட சுட மாட்டார்கள்,'' என நக்சல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் வெளிப்படையாக வாக்குறுதி அளித்துள்ளார். 'வரும் 2026 மார்ச்சுக்குள் நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு இருப்பார்கள்' என, மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துஇருந்தார்.இதையடுத்து நாடு முழுதும் நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரமடைந்தது. குறிப்பாக, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தாக்குதலில், நக்சல்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நக்சல்கள் போலீசாரிடம் சரண் அடைய விரும்புவதாக ஒரு கடிதம் உலா வந்தது. அதில், சண்டை நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நக்சல் செய்தித் தொடர்பாளர் மல்லுஜோலா வேணுகோபால் என்கிற அபய் அந்த கடிதத்தை எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்கப்பட்ட நிலையில், சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா அதனுடன் வந்த குரல் பதிவும் உண்மை தான் என உறுதி செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது: சமீபத்தில் நக்சல்கள் எழுதியதாக ஒரு கடிதம் உலா வந்தது. இதுவரை நடந்தது அனைத்தும் தவறு தான். சண்டை நிறுத்தத்தை விரும்புகிறோம் என, அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு அர்த்தம் அவர்கள் சரண் அடைய விரும்புகிறார்கள். ஆனால், நிச்சயம் சண்டை நிறுத்தம் இருக்காது. ஏனெனில், சரண் அடைய விரும்பினால், சண்டை நிறுத்தத்திற்கு அவசியமே ஏற்படாது. முதலில் ஆயுதங்களை கீழே போடுங்கள். போலீசார் ஒரு முறை கூட உங்களை நோக்கி சுட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை