உள்ளூர் செய்திகள்

தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றம்

கடந்த 2004 முதல் 2006 வரை இந்தியாவில் 16 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது கல்வியாளர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடுமையான போட்டிச் சூழல் காணப்படும் இன்றைய உலகில் பயம் மற்றும் தோல்விகளின் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு கல்வித் துறையிலுள்ள தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக இருந்து வருகிறது. தேர்வு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு என்.சி.இ.ஆர்.டி.,யைப் பணித்தது. கல்வித் துறையில் புகழ் பெற்ற என்.சி.இ.ஆர்.டி., தற்போது இது குறித்த பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. தேர்வுகளால் தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா என்ற ரீதியில் என்.சி.இ.ஆர்.டி. ஆய்வுகளில் ஈடுபட்டாலும் இதுவரை எந்த பரிந்துரையையும் அது தரவில்லை என மனித வள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். என்.சி.இ.ஆர்.டி., யின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு பெற்றோர்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர்களின் தற்கொலை எண்ணத்திற்கு தேர்வுகள் மட்டுமே காரணம் இல்லையென்றும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் பெற்றோரின் கவலை போன்றவை மாணவர்களுக்கு மாற்றப்படுவதால் இந்த எண்ணங்கள் வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மாணவர்களைப் பீடித்துள்ள இந்த தவறான நோய்க்கு பல கட்ட முயற்சிகள் மூலமாக தீர்வு காணப்படவுள்ளது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் இணைய தளங்கள் மூலமாகவும் நேரடியாகவும் கடந்த செப்டம்பர் முதல் தரப்படுகிறது. மாநில அரசுகளின் கல்வித் துறையுடன் இணைந்து தேர்வு முறையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம் என என்.சி.இ.ஆர்.டி., பரிசீலித்துவருகிறது. இவை தவிர யு.ஜி.சி.,யும் இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்வித் துறை சீர்திருத்தம் குறித்த கருத்துக்களைத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. நாளைய உலகை நிர்ணயிக்கப் போகும் இன்றைய மாணவ சமுதாயத்தை முறையாக செதுக்குவதன் தேவையை அனைவரும் உணரத் துவங்கிவிட்டனர் என்று நாம் நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !