உள்ளூர் செய்திகள்

வேலையை தேர்வு செய்வது எப்படி?

படித்து முடித்த ஒரு சில ஆண்டுகளிலேயே மூன்றுக்கு மேற்பட்ட துறைகளில் பணிமாறியவர்களும் உண்டு. தங்களுக்கான துறையை தேர்வு செய்து அதிலேயே பணியில் நீடிக்க கீழ்க்கண்ட வழிகள் உதவும் தங்களின் திறன் எது என்பதை முதலில் கண்டறிந்து அதற்கு ஏற்ற பணிகளை தேர்வு செய்யலாம். அது கல்வியினால் பெற்ற திறனாகவோ இயற்கையாக அமைந்த திறமையாகவோ இருக்கலாம். ஒரு துறைசார்ந்த பணியில் ஈடுபட முடிவு செய்து விட்டால் ஏற்கனவே அந்த துறையில் இருப்பவர்களிடம் யோசனை கேட்கலாம். ஓரிருவரை மட்டும் கேட்காமல் பலரிடம் இது பற்றிய ஆலோசனைகள் கேட்பது நல்லது. பலரும் வேலை இழப்பதற்கு காரணம் தாங்கள் பணிபுரியும் துறையை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளாததே. துறைசார்ந்த புதிய செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு துறைக்கு தேவையான புதிய திறன்களை பெற வேண்டும். உங்களது நேரத்திலும், பணத்திலும் 5 சதவீதத்தையாவது திறனை மேம்படுத்திக்கொள்ளும் பயிற்சிகளுக்காக ஒதுக்க வேண்டும். உங்களை நன்றாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற நிலை நீடிக்கும் வரை மட்டுமே நிறுவனம் உங்களை பணியாற்ற அனுமதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். எங்கு சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதை பார்த்து பணியில் சேர்வதை விட, எங்கு அதிக அனுபவம் கிடைக்குமோ அந்த இடத்தில் பணியாற்ற வேண்டும். அனுபவம் உடையவர்களை தேடி அதிக சம்பளத்துடன் வேலை வரும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், அதற்கேற்ப மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. பணிபுரியும் துறையிலும், இடத்திலும் ஏற்படும் மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு ஏற்றவாறு பணிபுரிபவர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த துறையில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணிபுரிய முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த துறை சார்ந்த வாய்ப்புகளை தேட வேண்டும். இதனால் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கினாலும், உங்களின் வேலை பறிபோகாது. பணியில் சேர்க்கும் போது சில நிறுவனங்கள் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறான சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கின்றன. இவை அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என நம்ப வேண்டாம். உங்களது தற்போதைய வருமானத்துக்கு ஏற்றபடியே வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்துக்கு உதவும் வகையில் சேமிப்பு, முதலீடுகளை திட்டமிடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !