பத்திரிகை துறையில் சாதிக்க ஐ.ஐ.எம்.சி.,
முன்பை விட பன்மடங்கானவர்களை மீடியா சென்றடைந்துள்ளது. மீடியா துறையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (ஐ.ஐ.எம்.சி.,) தொடங்கப்பட்டது. இந்த துறையில் புகழ் பெற்ற போர்டு பவுன்டேஷன் மற்றும் யுனெஸ்கோ வல்லுனர்களின் உதவியுடன் மத்திய அரசு இந்த கல்விநிறுவனத்தை டில்லியில் தொடங்கியது. அப்போது மத்திய தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி 1965ம் ஆண்டு ஐ.ஐ.எம்.சி.,யை தொடங்கி வைத்தார். தற்போது மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக இது இயங்கிவருகிறது. யுனெஸ்கோவின் இரண்டு ஆலோசகர்கள், சில ஆசிரியர்களுடன் எளிமையாக தொடங்கிய ஐ.ஐ.எம்.சி., தொடக்கத்தில் மத்திய பணிக்கு தேவையான தகவல்தொடர்பு அதிகாரிகளை உருவாக்கும் விதத்திலேயே படிப்புகளை வழங்கியது. ஆனால் 1969ம் ஆண்டு முதல் சர்வதேச தரத்திலான புதிய படிப்புகளை வழங்கி வருகிறது. தொடங்கப்பட்ட முப்பது ஆண்டுகளுக்குள்ளாக பிரின்ட் ஜர்னலிசம், போட்டோ ஜர்னலிசம், ரேடியோ ஜர்னலிசம், டெலிவிஷன் ஜர்னலிசம், டெவலப்மென்ட் கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன் ரிசர்ச், அட்வர்டைசிங், பப்ளிக் ரிலேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் கல்வியும், சிறப்பு பயிற்சிகளையும் வழங்கும் உலகின் மிகச்சிறந்த கல்விநிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதை மாஸ் கம்யூனிகேஷனுக்கான சிறப்பு மையமாக யுனெஸ்கோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. இங்குள்ள முதுநிலை டிப்ளமோ படிப்புகள் - அட்வர்டைசிங் அண்டு பப்ளிக் ரிலேசுன்ஸ் - ஜர்னலிசம் (ஆங்கிலம், இந்தி, ஒரியா, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய பிரிவு களில்) இவை தவிர... - இந்தியன் இன்பர்மேஷன் சர்வீசின் அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சிகள் - வளரும் நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் போன்றவற்றையும் ஐ.ஐ.எம்.சி., ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இதில் ஜர்னலிசம், அட்வர்டைசிங் அண்டு பப்ளிக் ரிலேஷன் படிப்புகளில் சேர ஏதாவது ஒரு இளநிலை படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரிகள், பத்திரிகை துறைகளில் முன்அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான நுழைவுத்தேர்வு டில்லி, புவனேஷ்வர், கோல்கட்டா, பாட்னா, லக்னோ, மும்பை, பெங்களூரு, கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை முதல்வாரத்தில் டில்லியில் நடக்கும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆங்கிலத்தில் ஜார்னலிசம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கோல்கட்டாவிலும் நேர்முகத்தேர்வு நடக்கும். எழுத்துத்தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கைக்கான மாணவர் பட்டியல் தயார் செய்யப்படும். ஐ.ஐ.எம்.சி., மாணவர்களுக்காக ஸ்டார் டிவி போன்ற முன்னணி மீடியா நிறுவனங்கள் ஸ்காலர்ஷிப் வழங்குகின்றன. இங்குள்ள டிப்ளமோ படிப்புகளும் முழுநேர படிப்புகளே. இதில் சேரும் மாணவர்கள் பகுதிநேரமாக வேறுபடிப்புகளில் சேர முடியாது. முழுநேரமாக பணிபுரிபவர்களும் இதில் சேர்ந்து படிக்க முடியாது.