உள்ளூர் செய்திகள்

ஒயின் சோதனையாளர் தொழிலில் உலகளாவிய வாய்ப்புகள்

ஒயினை சோதனையிட்டு, அதன் தன்மைகளைக் கூறும் ஒயின் சோதனையாளர் தொழில், உலகெங்கும் பிரபலமான ஒன்றாக விளங்குகிறது. பல கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் பெரிய ஓட்டல்களில் இந்த தொழிலுக்கு மவுசும், முக்கியத்துவமும் உண்டு. ஒரு ஒயினை முகர்ந்துப் பார்த்தோ, அதை சிறிது சுவைத்துப் பார்த்தோ, அதன் நிறத்தைப் பார்த்தோ அதன் தன்மை மற்றும் வகையை கண்டுபிடிப்பது இத்தொழிலின் முக்கிய அம்சங்கள். அதாவது, அந்த திராட்சை எந்த நாட்டில் விளைந்தது, களிமண்ணில் விளைந்ததா? அல்லது மணலில் விளைந்ததா? போன்றவற்றை கண்டுபிடிப்பதோடு, ஒரு ஒயின் பழ வகையைச் சார்ந்ததா? அல்லது மலர் வகையைச் சார்ந்ததா மற்றும் அதனுடன் நடுத்தண்டு தாவரத்தின் கூறுகளையும் கொண்டுள்ளதா? மற்றும் அத்தாவரத்தின் வயது 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகுமா? போன்ற பல விபரங்களை கண்டுபிடிப்பது, ஒயின் சோதனையாளர்(Sommelier) தொழிலின் அம்சங்கள். Sommelier நிலை மற்றும் படிப்புகள் ஒயின் சுவைத்தல் என்பது, இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு தொழிலாக உள்ளது. இந்தியாவின் ஒயின் பயன்பாடானது, 25 முதல் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒயின் சுவை நிபுணர்கள், Sommeliers என்று அழைக்கப்படுகின்றனர். இந்த Sommelier எனும் நிலை, தேவையான பயிற்சிகளின் மூலம் வருவதாகும். மாறாக, ஒருவர் சிறந்த ஒயின் விரும்பி மற்றும் ஒயின் குடிப்பதிலும், அதன் வகை மற்றும் ருசிகளை தெரிந்து வைத்திருப்பதில் வல்லவர் என்பதால் மட்டுமே Sommelier எனும் தகுதி வந்துவிடாது. Sommelier பள்ளிகளில், சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இதுவே, பொதுவான விதியாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது எந்த Sommelier கல்வி நிறுவனமும் இல்லை. அதேசமயம், இத்துறை தொடர்பான சான்றிதழ் படிப்புகளை இந்தியாவில் மேற்கொள்ளலாம். இத்துறையின் நிபுணர்கள் இந்த சான்றிதழ் படிப்புகளை நடத்துகிறார்கள். ஆனால், விரிவான நிலையிலான படிப்புகளை மேற்கொள்ள, ஒருவர் வெளிநாடு சென்றாக வேண்டும். அதுபோன்ற நிலையில் விருந்தோம்பல் தொடர்பான பட்டம் உதவிபுரிகிறது. மேலும், பிரெஞ்ச், இத்தாலியன் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருந்தால் மிக நன்று. ஏனெனில், ஒயின் தொடர்பான சிலவகை சிறப்பு படிப்புகள் மேற்கூறிய மொழிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஏனெனில், ஒரு ஒயினின் பெயரை மிக சரியாக உச்சரிப்பது ஒரு Sommelier -க்கு முக்கியம். எனவேதான், மேற்கூறிய மொழியறிவைப் பெறுவது அவசியமாகிறது. படிப்பு மற்றும் கட்டண விபரம் இந்தியாவைப் பொறுத்தவரை, அடிப்படை சான்றிதழ் படிப்பானது, அடிப்படை ஒயின் வகைகள், உணவு மற்றும் ஒயின் இணை வகைகள் ஆகியவற்றை சுவைத்தல், ஒயின் சேகரிப்பு மற்றும் அவற்றைப் பரிமாறுதல் ஆகியவற்றில் பயிற்சியளிக்கின்றன. ஒரு ஒயின் வகையை சுவைக்கும்போது, அதன் வரலாற்றை அனுமானிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒயின் பகுப்பாய்வு என்பது, ஒருவரின் நாக்கு, வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒரு ஒயினின் முழுப் பின்னணியை கண்டுபிடிப்பதாகும். அனுபவமிக்க நிபுணர்கள், ஒரு ஒயினின் கடந்த காலத்தையே துல்லியமாக கணித்துவிடுவார்கள். WSET வழங்கும் படிப்பானது, உலகெங்கிலுமுள்ள 10 முதல் 12 ஒயின் வகைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதில், 6 மணி நேரங்களைக் கொண்ட நிலை 1 படிப்பானது, 1 முதல் 2 நாட்கள் வரை நடைபெறும். 16 மணி நேரங்களைக் கொண்ட நிலை 2 படிப்பானது, 3 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும். இவைத்தவிர, பலவிதமான நிலைகளில், மாணவர்கள், ஒயினின் தெளிவு, அடர்த்தி, நிறம், வகை, அமிலத்தன்மை மற்றும் அதிலுள்ள ஆல்கஹால் விகிதம் போன்றவைகளை அதிகரிக்க பயிற்சியளிக்கப்படுகின்றது. புலன்கள் தொடர்பான மதிப்பீட்டிற்கு பிறகு, ஒயின் சுவைத்த அனுபவத்தை விரிவாக தெரிவிக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, வேறு தொழில்முறை படிப்புகள் நடத்தப்படுவதைப் போல, ஒயின் தொடர்பான படிப்புகளை எளிதாக நடத்த முடிவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாள் பயிற்சிக்கும், பயிற்சியாளர், உரிமம் பெற வேண்டியுள்ளது. ஒரு நாளைய உரிமம் ரூ.5500 மதிப்புடையது மற்றும் வெறும் 6 மணி நேரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. இந்தியாவில், மொத்தம் 3 நிலைகளிலான சான்றிதழ் படிப்புகளை மட்டுமே WSET வழங்குகிறது. நிலைகள் கூடகூட, காலமும், செலவும் அதிகமாகிறது. வெளிநாட்டிலுள்ள ஒயின் படிப்புகள் சிறந்த ஒயின் பள்ளிகளைக் கொண்டிருப்பதில் பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது. பாரிஸ் நகரிலுள்ள Le Cordon Bleu கல்வி நிறுவனம், Rhone பள்ளத்தாக்கிலுள்ள du Vin de Suze la Rousse பல்கலைக்கழகம் போன்றவை ஒயின் படிப்புகளுக்கு மிகவும் பிரபலமானவை மற்றும் பலராலும் பரிந்துரைக்கப்படுபவை. The Culinary Institute of America மற்றும் Canadian Association of Professional Sommeliers in Toronto போன்றவையும் ஒயின் தொடர்பான படிப்புகளை வழங்குகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி வழங்குநர்களின் மூலமாக, உலகெங்கிலும், ஒயின் தொடர்பான படிப்புகளை WSET வழங்குகிறது. இந்தியாவில், WSET -ன் கீழ் செயல்படும் Tulleeho என்ற கல்வி மையம், தற்போதைய நிலையில், டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில், நிலை 1, 2 மற்றும் 3 ஆகிய படிப்புகளை வழங்குகின்றன. ஹோட்டல் மேலாண்மை முடித்த மாணவர்கள் ஒயின் டேஸ்டிங் படிப்பை சிறப்பு படிப்பாக மேற்கொள்வது குறைவாகவே உள்ளது. மனப்பாங்கு மற்றும் பணி நிலைகள் ஒரு Sommelier, பலதரப்பட்ட திறமைகளைக் கொண்டிருப்பதோடு, கற்கும் ஆர்வமுடையவராகவும், உணவு மற்றும் பானங்கள் துறையில் அன்றாட நிகழும் மாற்றங்கள் பற்றி தெளிவாக அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும். Sommelier வேலைவாய்ப்பு என்பது விருந்தோம்பல் துறையை சேர்ந்ததாக இருப்பதால், Sommelier -க்கு பல சவால்கள் உள்ளன. நீண்ட பணி நேரங்கள், விடுமுறை நாட்களிலும் வேலை போன்றவை அவற்றுள் முக்கியமானவை. ஒரு Sommelier என்பவர், பார் அல்லது ரெஸ்டாரண்டின் வைப்பறை பொறுப்பாளராகவும், ஒரு விருந்தினருக்கு ஒயினை விற்பனை மற்றும் பரிந்துரை செய்வது, ஒயின் மெனுவை தயாரிப்பது மற்றும் உணவு பொருத்தங்களை பரிந்துரை செய்வது ஆகிய பணிகளுக்கு பொறுப்பேற்பவராகவும் இருக்கிறார். மேலும், ஒயின் விற்பனை, வாங்குதல், சேகரித்தல் மற்றும் விவரப் பட்டியலை நிர்வகித்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறார். பணி வகைகள் மற்றும் சம்பளம் ஒரு அனுபவம் பெற்ற Sommelier, ஒயின் இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் மதுபான கம்பெனிகள் போன்ற பெரியளவிலான நிறுவனங்களில், ஒயின் கன்சல்டன்ட் என்ற நிலையில் பணிபுரியலாம். மேலும், உலகம் முழுவதும் Sommelier -க்கான பணி நிலைகள் பரந்துபட்டதாக உள்ளன. சுற்றுலா கப்பல்கள், ஒயின் பார்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், விமானத்தின் உட்புற சேவைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் பரவலான பணி நிலைகள் உள்ளன. மேலும் அனுபவம் பெற்ற Sommelier, ஒரே நேரத்தில் பல ரெஸ்டாரண்டுகளுக்கு தலைமை Sommelier -கவும், ஒயின் டைரக்டராகவும் பணிபுரியலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு தகுதிவாய்ந்த Sommelier, ஆரம்ப நிலையில் ரூ.10,000 முதல் 20,000 வரை பெறுகிறார். சில ஆண்டுகள் அனுபவத்திற்கு பின்னர், சம்பளம் ரூ.50,000 வரை உயர்கிறது. அதேசமயம், உலகளாவிய அனுபவம் பெற்ற ஒரு Sommelier, இந்தியாவில் ரூ.1 லட்சம் வரை ஊதியமாக பெற முடியும். ஆனால், வெளிநாட்டைப் பொறுத்தவரை சம்பளம் அதிகம். பணபலம் படைத்த வாடிக்கையாளர்களிடம் சகஜமாக பேசி, காரியம் சாதிக்கும் சாமர்த்தியம் கொண்ட Sommelier -க்கு கிடைக்கும் மரியாதையே தனி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !