இந்தியாவில் உயரவிருக்கும் சம்பளங்கள் - ஒரு மகிழ்ச்சி ரிப்போர்ட்
உலகெங்கும் நிலவி வரும் பொருளாதார தேக்க நிலையால் எங்கும் சம்பள வெட்டு மற்றும் ஆட்குறைப்பு என்பதே நடைமுறையாகியிருக்கும் இன்றைய கால கட்டத்தில், இந்தியாவில் சம்பள உயர்வு கட்டாயம் தரப்படவுள்ளதாக கார்ப்பரேட் நிறுவனங்களின் வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் அடிப்படை கட்டுமான வசதி, எப்.எம். சி.ஜி., ஆகியவற்றில் சம்பள உயர்வு கணிசமாக தரப்படும் என்று பிரபலமான பன்னாட்டு மனித வள மேம்பாட்டு நிறுவனமான மெர்ஸர் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 6 முதல் 8 சதவீத சம்பள உயர்வை அறிவிக்கவுள்ளதாக இது கணித்துள்ளது. எப்.எம்.சி.ஜி., மற்றும் அடிப்படைக் கட்டுமானத் துறைகளில் 8 முதல் 12 சதவீத சம்பள உயர்வு தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஐ.டி., மற்றும் நிதிச் சேவைத் துறைகளில் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாகவும் மெர்ஸர் தெரிவித்துள்ளது. ஐ.டி., துறையில் அதிகபட்சமாக 4 சதவீத உயர்வு தரப்படலாமாம். ஏப்ரல் 1ந் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளதால் நிறுவனங்கள் தங்களது சம்பள உயர்வு குறித்த புதிய மதிப்பீடுகளில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய பொருளாதாரச் சூழலை மனதில் கொண்டே சம்பள உயர்வு தீர்மானிக்கப்படும் என்று வேலை ஆலோசகர்கள் கருதுகிறார்கள். காலாண்டு மனித வள நிதியறிக்கை, ஊழியர் எண்ணிக்கை, திட்டமிடல் போன்ற நடவடிக்கைளை நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தெரிவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. சிறப்பாகச் செயல்படும் ஊழியர்களுக்கு சிறப்பான சம்பளம் தருவது, சராசரி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தருவதில் தயக்கம் காட்டுவது என தற்போது நிறுவனங்கள் புதிய பாணியை கடைப்பிடித்து வருவது குறிப்பி டத்தக்கது. இதனிடையே ஐ.டி., சேவைகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக ஐ.டி., சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 42 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஐ.டி., சாப்ட்வேர் துறையில் தற்போது 16 லட்சம் பேர் பணி புரிகிறார்கள். இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனா இருக்கிறது. எனினும் நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இடைவெளி அதிகம்.