உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க அரசு  பரிசீலனை!: போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தகவல்

கர்நாடகாவில் இதற்கு முன் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சலுகை கட்டணத்தில், பஸ் பாஸ் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின், மாநிலத்தில், 'சக்தி' திட்டம் அமலானது. இதனால், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர்.சிபாரிசு மாணவியரும் இத்திட்டத்தை பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் பலரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, கர்நாடக குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.அதை ஏற்றுக்கொண்ட போக்குவரத்து துறை, 'பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க, அனுமதி அளிப்பது குறித்தும், அதற்கான இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி, கே.எஸ்.ஆர்.டி.சி., பி.எம்.டி.சி., வடமேற்கு போக்குவரத்து கழகம் மற்றும் கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகம்' என, நான்கு போக்குவரத்து கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறியதாவது:ஏழை மாணவர்கள், தங்களின் பயணத்துக்கு அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்கள், பின் தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான, நம்பிக்கையான பயண வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக அரசு ஆலோசித்து வருகிறது.பள்ளி சிறார்கள், பஸ்களில் ஏறும் போது, கீழே விழுந்து காயமடைந்த சம்பவங்கள், ஆங்காங்கே நடப்பதாக, அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். எனவே மாணவர்களுக்கும் பாதுகாப்பான பயண வசதி வேண்டும். தற்போது மாணவியருக்கு மட்டும் இலவச பயண சலுகை கிடைக்கிறது.சிறப்பு பஸ்கள் இதே போன்று, மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை விஸ்தரிக்க, அரசு ஆர்வம் காட்டுகிறது. மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள வழித்தடங்களில், கிராமப்புற பாதைகளில் இலவசமாக அழைத்து செல்ல, சிறப்பு பள்ளி, கல்லுாரி பஸ்கள் அறிமுகம் செய்யவும் ஆலோசிக்கிறோம். இதனால், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சரியான நேரத்துக்கு செல்லவும், வீடு திரும்பவும் உதவியாக இருக்கும்.படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக பெங்களூரின் சுற்றுப்புற மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அதன்பின் மற்ற மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படும். திட்டத்துக்காக கூடுதல் பஸ்கள் வாங்கவும் அரசு ஆலோசிக்கிறது. அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள், ஜி.பி.எஸ்., டிராக்கிங் வசதி, அவசர பேனிக் பட்டன்கள் இருக்கும். ஒவ்வொரு பஸ்சிலும் குழந்தைகள் உதவி எண் 1098 எழுதப்படும்.பள்ளி, கல்லுாரி பஸ்களை இயக்கும் ஓட்டுநர்கள், ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். குழந்தைகள் உரிமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதிகமாக பெண்கள் பயணிக்கும் வழித்தடங்களில், மகளிர் நடத்துநர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்