உள்ளூர் செய்திகள்

தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி கடலுாரில் கோலாகலம்: மாணவ, மாணவிகள் அசத்தல்

கடலுார்: 'தினமலர்' பட்டம் இதழின் இந்தாண்டிற்கான 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்களுக்காக 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற தலைப்பில் வினாடி வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி பதிப்பு 'தினமலர்' நாளிதழ்-பட்டம் சார்பில் இந்த ஆண்டுக்கான போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 300 பள்ளிகளுக்கு மேல் நடத்தப்பட உள்ளது.இதனை, 'தினமலர் - பட்டம்' இதழ், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது. இந்தாண்டிற்கான போட்டி, கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தகுதி சுற்றாக முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக, மதிப்பெண்கள் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 16 மாணவர்களும் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டது.ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன. 8 அணியினருக்கும் சாய்ஸ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதன்பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில், முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது. சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு, மாணவ, மாணவிகள் பதில் அளித்தனர்.உற்சாகமாக பதிலளித்த மாணவர்கள்'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு, மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் பதில் அளித்தனர். உடனுக்குடன் பதில் அளித்த மாணவர்களை ஊக்கவிக்கும் வகையில் அரங்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.இறுதியில் 9ம் வகுப்பு மாணவிகள் அபிநயா, ஜாபினா அணி முதலிடமும், பிளஸ் 1 மாணவர்கள் மோகனஹரிஷ், அபிஷேக் அணி இரண்டாமிடமும் பிடித்தன. முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் புதுச்சேரியில் ஜனவரி 28ம் தேதி நடக்கும் மாநில அளவிலான வினாடி வினா போட்டியின் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றன.பள்ளி அளவிலான போட்டியில் வென்ற மாணவி, மாணவிகளுக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. புதுச்சேரி 'தினமலர்' நாளிதழ் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மகாலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி மோகன், ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன், கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நடராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினர். விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்