உள்ளூர் செய்திகள்

அரசுப் பள்ளி கட்டடம் புதைவு - தினமலர் செய்தியால் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு பள்ளி கட்டடம் புதைந்தது பற்றி, தினமலர் நாளிதழ் செய்தி அடிப்படையில் தாக்கலான வழக்கில் அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆபத்து விருதுநகர் வழக்கறிஞர் ராமநாதசேதுபதிதாக்கல் செய்துள்ள பொது நல மனு: மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், அரும்பனுார், அரசு நடுநிலைப் பள்ளி கட்டடம் புதைந்து, ஒரு பக்கம் சாய்ந்து, மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில், கடந்த, 2014 ஆக., 12ல், செய்தி வெளியாகியுள்ளது. பள்ளி வளாகத்தில், 9.75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடம் தரம், உறுதி இன்மையால் விரிசல் ஏற்பட்டது; தரைத்தளம் பூமியில் புதைந்தது. இதை ஆய்வுசெய்த அதிகாரிகள், அங்கிருந்த வகுப்பறையில் படித்த மாணவர்களை சமுதாயக் கூடத்திற்கு இடமாற்றியுள்ளனர். கழிப்பறை, சுற்றுச்சுவர், ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையே தடுப்புகள் இன்றி, சமுதாயக் கூடத்தில் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அனைத்து மாநில பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர், கட்டட வசதிகள் ஏற்படுத்தி, தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; இதை, ஆறு மாதங்களில் நிறைவேற்ற வேண்டும் என, கடந்த, 2012ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கல்வி அலுவலர்கள், போர்க்கால அடிப்படையில் புதிய கட்டடம் கட்ட தவறிவிட்டனர். தரமற்ற கட்டடம் கட்ட காரணமான அரசு அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரிப்பணம், 9.75 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதால், நீதி விசாரணை நடத்த வேண்டும். கட்டடத்தை இடித்து அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒத்திவைப்பு: நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி கொண்ட, பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், மதுரை கலெக்டர், மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிப்., 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்