வேலூர் சி.எம்.சி மருத்துவமனை: நாட்டிலேயே முதல் மோட்டார் நுட்ப செயற்கை வால்வு மாற்று சிகிச்சை
வேலூர்: இந்திய இதயநோய் சிகிச்சைத் துறையில் புதிய மைல்கல்லாக, நாட்டிலேயே முதன்முறையாக மோட்டார் நுட்பத்தில் செயற்கை வால்வு மாற்ற (TAVR) சிகிச்சையை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி) மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்துள்ளது. 'வைட்டாப்ளோ லிபர்ட்டி' எனப்படும் இந்த அதிநவீன தொழில்நுட்பம் மைக்ரோபோர்ட் நிறுவனம் வடிவமைத்தது. ரத்தநாளங்கள் வழியாக மோட்டார் கட்டுப்பாட்டில் செயற்கை வால்வை இதயத்தில் பொருத்தும் உலகின் முதல் நுட்பம் என்பதுவே இதன் சிறப்பு.இந்த சிகிச்சை 82 வயது மூதாட்டி ஒருவருக்கு ஜூலை 22 அன்று மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் இதயவியல் பிரிவு (யூனிட் II) தலைவரான டாக்டர் ஜான் ஜோஸ் தலைமையிலான குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தினர். இதன் மூலம் செயற்கை வால்வு பொருத்தும் செயல்முறை மேலும் துல்லியமாக, பாதுகாப்பாக, மருத்துவர் முழுகட்டுப்பாட்டில் இடம்பெறும் வகையில் வழிவகுக்கிறது.இந்த மோட்டார் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் மருத்துவ செயல்முறை என்பதால் இது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகக் போற்றப்படுகிறது. இதுவரை நான்கு நோயாளிகளுக்கு இந்த முறையில் வால்வு பொருத்தப்பட்டுள்ளதுடன், அனைவரும் நலமுடன் உள்ளனர் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.வேலூர் சி.எம்.சி மருத்துவமனை இதுவரை 400-க்கும் மேற்பட்ட TAVR சிகிச்சைகளையும், 10,000-க்கும் மேற்பட்ட இதய வால்வு சிகிச்சைகளையும் மேற்கொண்ட முன்னோடி மையமாக திகழ்கிறது. அதிநவீன உலகத் தொழில்நுட்பங்களை இந்தியாவில் முதன்முறையாகக் கொண்டு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்புணர்வை இந்த சாதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.இந்த முன்னோடி சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட டாக்டர் ஜான் ஜோஸ் மற்றும் மருத்துவக் குழுவினரை மருத்துவமனை நிர்வாகம் பாராட்டியுள்ளது.