முதுநிலை பேராசிரியர் பதவி உயர்வுக்கு சிண்டிகேட் ஒப்புதல் இன்றி நேர்காணல்; சென்னை பல்கலை மீது குற்றச்சாட்டு
சென்னை: சிண்டிகேட், நிதிக்குழு ஒப்புதல் பெறாமல், சென்னை பல்கலையில் முதுநிலை பேராசிரியர் பதவி உயர்வுக்கான நேர்காணல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை பல்கலை, நாட்டின் முதன்மை பல்கலைகளில் ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக, கடும் நிதி பற்றாக்குறையால், பல்கலை நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதவி உயர்வு உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், பல்கலையில் பணியாற்றும் ஐந்து பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு, நேர்காணல் முடிந்தும், பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல்கலை வரலாற்றில் முதன் முறையாக, முதுநிலை பேராசிரியர் பதவி உயர்வு நேர்காணல், பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த பதவி உயர்வு நடைமுறையில், பல்வேறு விதி மீறல்கள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:சென்னை பல்கலை வரலாற்றில் முதல் முறையாக, 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக பணியாற்றி வருவோருக்கு, முதுநிலை பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.இது குறித்த கருத்து, சில மாதங்களுக்கு முன் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அப்போது, நிதிக்குழு ஒப்புதல் பெருமாறு, நிதித்துறை சார்ந்த அதிகாரிகள் வலியுறுத்தினர்.அந்த கருத்து, சிண்டிகேட் பதிவேட்டில் குறிப்பிடப்படவில்லை. அதனால், முதுநிலை பேராசிரியர் பதவி உயர்வுக்கு, நிதிக்குழு ஒப்புதல் பெறப்படவில்லை.பதவி உயர்வு, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களையும், சிண்டிகேட் கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும். அந்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.நிதிக்குழு, சிண்டிகேட் குழு ஒப்புதல் இன்றி, 15 பேருக்கு, முதுநிலை பேராசிரியர் பணியிடத்துக்கு, நேற்று முன்தினம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.இந்த விதிமீறல்கள் குறித்தும், அவசர, அவசரமாக நேர்காணல் நடத்துவதற்கான காரணம் குறித்தும், உயர் கல்வித்துறை விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.