மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் தடகள போட்டி - தயார் நிலையில் 88 வீரர்கள்
திருப்பூர்: மாநில அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் தடகள போட்டியில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 88 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள், தடகள போட்டி நடைபெற உள்ள, ஈரோடு மாவட்டத்துக்கு செல்கின்றனர். மாநில தடகள சங்கம் வாயிலாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் மாநில அளவில் தடகள போட்டி நடத்தப்படுகிறது. 29வது ஜூனியர் சாம்பியன் ஷிப் தடகள போட்டி, ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஜூலை 5 முதல் வரும் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவில் தடகள போட்டி நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட தடகள சங்க செயலாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், "மாவட்டங்களுக்கு இடையே நடக்கும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 88 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 57 ஆண்கள், 31 பெண்கள் அடங்குவர். இவர்கள், போட்டியில் பங்கேற்பதற்கான அனைத்து வசதிகளையும் மாவட்ட தடகள சங்கம் செய்துள்ளது" என்றார்.