உள்ளூர் செய்திகள்

விளையாட்டுப் போட்டி - முறையான வசதிகளை ஏற்படுத்தித் தராத கல்வித்துறை மீது புகார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாரதியார் குடியரசு தின மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் துவங்கியது. அடிப்படை வசதிகள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் தவித்தனர். போட்டியை துவக்கி வைத்த கலெக்டர் ரவிக்குமாரிடம் புகார் தெரிவித்தனர். மாநில போட்டி: பள்ளி மாணவர்களுக்கிடையேயான பாரதியார், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் குத்துச்சண்டை, டேக்வாண்டோ, டெனிகாய்ட், கடற்கரை வாலிபால் ஆகிய நான்கு போட்டிகள், 14, 17, 19 வயது பிரிவினருக்கு இடையேயான போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் 15 மண்டலங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வான 2,400 மாணவர்கள் பங்கு பெற்றனர். போட்டிகள்: இதில் குத்துச்சண்டை, டேக்வாண்டோ போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கிலும், கடற்கரை வாலிபால் முத்து நகர் கடற்கரையிலும், டெனிக்காய்ட், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. முதல் கட்ட போட்டிகள் நேற்று முதல் (ஜன.,19) முதல் ஜன.,21 வரையும், இறுதி போட்டிகள் பிப்., 6 முதல் 8ம் தேதி வரையும் நடக்கவுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து வந்த பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் தங்குவதற்கு 12 பள்ளிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடிப்படை வசதிகள் இல்லை தங்கும் இடத்தில் விளையாட்டு வீரர்களுக்கு போதுமான கழிப்பறை, குடி நீர், குளியலறை வசதிகள் இல்லை. மேலும் விளையாட்டு நடக்கும் இடங்களில் விளையாட்டு வீரர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் பந்தல்கள் அமைக்கப்படவில்லை. கொளுத்தும் வெயிலில் விளையாட்டு வீரர்களும், அவர்களது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் கடும் அவதிப்பட்டனர். விளையாட்டு வீரர்கள் மனதளவில் சோர்ந்து விட்டனர். கலெக்டரிடம் புகார் போட்டிகளை துவக்கி வைக்க கலெக்டர் ரவிக்குமார் வருகை தந்தார். அவரிடம் வெளியூர்களில் இருந்து வந்த பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் புகார் தெரிவித்தனர். விளையாட்டு போட்டிகளை நடத்தும் கல்வித்துறை, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற குறைபாடுகள் இல்லாமல் விளையாட்டுக்களை நடத்தும் பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து கலெக்டர் ரவிக்குமார், "விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து தர வேண்டும்" என கண்டித்தார். பெற்றோர் ஒருவர் தெரிவித்ததாவது: விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றால் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். போட்டிகளில் முழுக்கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதில் பல தனியார் பள்ளிகளில் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தான் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் முறையான அடிப்படை வசதிகளை செய்து தர பள்ளிக்கல்வி நிர்வாகம் முன் வர வேண்டும். இதுபோன்ற குறைபாடுகளை வைத்துக் கொண்டு தேசிய, சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் எப்படி பதக்கம் பெற முடியும், என அவர் தெரிவித்தார். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 1,200, இரண்டாம் பரிசாக 800, மூன்றாவது பரிசாக 400 ரூபாயும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்