மருத்துவம் படிக்க இடம் கிடைத்த ஏழை மாணவர் கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிப்பு
புதுச்சேரி: அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர் கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல் நிலைகுலைந்துள்ளார்.கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அய்யனார் - அஞ்சலை தம்பதியின் மகன் ராஜகுரு. அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த இவர், நீட் தேர்வில் 187 மதிப்பெண்கள் பெற்றார். புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது.அவர் மருத்துவம் பயில புதுச்சேரி அரசு சார்பில், 4 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். ஆனால் மாணவருக்கு கல்லுாரியில் கூடுதல் கட்டணமாக புத்தக கட்டணம், கிளினிக்கல் கட்டணம், சீருடை கட்டணம், பஸ் கட்டணம், பி.ஜி., கோச்சிங் கட்டணம், என்று குறைந்தது 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் நிலையில் ஏழை மாணவர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.அத்தொகையை திரட்ட முடியாமல் திண்டாடி வருகிறார். அவரது தாய் இறந்து விட்டார். தந்தை அய்யனார் உடல் ஊனமுற்றவர். அவர் வருமான இன்றி வீட்டிலேயே முடங்கி உள்ளார்.மாணவர் ராஜகுருவின் மருத்துவ படிப்பிற்கான செலவிற்கு பணம் திரட்ட முடியாமல் திண்டாடி வருகிறார். மாணவரின் மருத்துவ சீருடை செலவினை சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கம் ஏற்றது. அவரை நேரில் நிர்வாகிகள் சந்தித்து, தளர வேண்டாம் என ஊக்கப்படுத்தினர்.தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் ராஜ குருவிற்கு மருத்துவக் கல்வி படிக்க தன்னார்வர்கள் முன் வர வேண்டும் என்று புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நல சங்க தலைவர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார். மாணவரின் மொபைல் எண்: 90430-26773.