இங்கு இருப்பது புத்தகங்கள் இல்லை... பொக்கிஷம் தினமலர் நுாலகத்துக்கு வந்த ஓய்வு ஆசிரியர் நெகிழ்ச்சி
பெங்களூரு: “இங்கு இருப்பது புத்தகங்கள் இல்லை, காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம்,” என்று, தினமலர் நுாலகத்திற்கு வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.பெங்களூரு தினமலர் அலுவலகத்தின், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, இந்திராநகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் ராமசாமி, 72, நேற்று வந்தார்.'பதிணென் புராணங்கள்' என்ற புத்தகத்தை, அரை மணி நேரத்திற்கு மேலாக மிகுந்த ஆர்வத்துடன் படித்தார்.பின், அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் மேலப்பாவூர். புதுடில்லி டி.டி.இ.ஏ., பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளேன். ஏழு ஆண்டுகளாக பெங்களூரு இந்திராநகர் 9 வது கிராசில் உள்ள, மகன் வீட்டில் வசிக்கிறேன்.ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இருந்தே, தினமலர் நாளிதழ் படிக்கிறேன். இங்கு நுாலகம் திறந்திருப்பதை நாளிதழில் படித்தேன்.சில காரணங்களால் உடனடியாக வர முடியவில்லை. ஒரு வழியாக இன்று வந்துவிட்டேன். 'பதிணென் புராணங்கள்' என்ற புத்தகத்தை படித்தேன். இது மாதிரியான புத்தகங்கள் கிடைப்பது அரிது. நிறைய புத்தகங்கள் உள்ளன.இங்கு இருப்பது புத்தகங்கள் இல்லை. காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம். அரிதான புத்தகங்களை தேடி, தேடி வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார்.ஸ்ரீராமபுரம் சேவாஸ் ரமம் உயர் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, 77, என்பவரும், நுாலகத்திற்கு வந்தார். விவேகானந்தரை பற்றி எழுதிய புத்தகத்தை ஆர்வமாக படித்தார்.அவர் கூறுகையில், “இங்கு உள்ள புத்தகங்கள் அருமை. இன்னும் நிறைய தமிழ் புத்தகங்கள் வர வேண்டும் என்பது எனது ஆசை. பாமர மக்கள் படித்து புரியும் வகையிலான, புத்தகங்களை இங்கு நிறைய கொண்டு வாருங்கள்.உறவினர்களை வீட்டிற்கு அழைப்பது போல, புத்தகங்களை படிக்க வாருங்கள் என்று நீங்கள் அழைப்பது மகிழ்ச்சியான விஷயம். உங்கள் நல்ல சேவைக்கு எனது மன மார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.