உள்ளூர் செய்திகள்

தொழில் வளர்ச்சிக்கு மனித வள உருவாக்கம் நிப்ட்- டீ கல்லுாரிக்கு கலெக்டர் பாராட்டு

திருப்பூர்: திருப்பூரில் இயங்கி வரும், 'நிப்ட்-டீ' கல்லுாரியில், கலெக்டர் மனிஷ் நாரணவரே நேற்று ஆய்வு நடத்தி, பாராட்டு தெரிவித்தார்.கலெக்டரை, கல்லுாரி தலைமை ஆலோசகர் ராஜா சண்முகம், கல்லுாரி தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் மோகன்குமார், 'டீன்' சம்பத், கல்லுாரி முதல்வர் ராதாமணி வரவேற்றனர். நவீன ஆய்வகங்கள், பின்னலாடை மற்றும் பேஷன் தொழில்நுட்ப பயிற்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையம், மாணவர்களின் படைப்பாற்றல் செயல்பாடு ஆகியவை குறித்து, கலெக்டருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அது தொடர்பான பொருட்களையும், மாணவர் படைப்புகளையும், கலெக்டர் பார்வையிட்டு, வெகுவாக பாராட்டினார்.மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த நடைமுறை கல்வி, திறன் அடிப்படையிலான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் கூடிய கற்றல் வழிமுறைகள் குறித்து கல்லுாரி நிர்வாகிகள் விளக்கினர். அத்துடன், கல்லுாரி நிர்வாகம், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வரும் பயிற்சி திட்டம், பகுதி நேர பயிற்சி திட்டம், தொழில்முனைவு வளர்ச்சிக்கான முயற்சிகள், சமூக பொறுப்பு சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.மாணவர்கள் உருவாக்கியிருந்த, ஆடை வடிவமைப்புகள், 'கிராபிக்ஸ்' மற்றும் படைப்பாற்றல் கண்காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டார். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், கல்வி மற்றும் தொழில்துறையை ஒருங்கிணைந்து செயல்படும் 'நிப்ட்-டீ' கல்லுாரியின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.இளைஞர்களுக்கு, திறன் சார்ந்த கல்வி மற்றும் தொழில்முனைவு பயிற்சிகள் மிகவும் அவசியமானவை; தொழில் வளர்ச்சிக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்குவதில், கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது; அதிலும், 'நிப்ட்-டீ' கல்லுாரி முன்னோடியாக விளங்குகிறது என்று, கலெக்டர் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்