உள்ளூர் செய்திகள்

கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீடு: வருமான உச்சவரம்பு நிர்ணயிக்க முடியாது ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:25 சதவீத இடங்கள் மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின குழந்தைகளின் பெற்றோருக்கு, எந்த வருமான உச்ச வரம்பும் நிர்ணயிக்கப் படவில்லை.சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு, வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும். இல்லையெனில் வசதியானவர்கள், ஜாதி அடிப்படையில் இந்த சலுகையை பெற அதிக வாய்ப்புள்ளது.எனவே, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது போல, சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.மஹாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில், சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்திலும் நிர்ணயிக்கக் கோரி, 2025ம் ஆண்டு அக்டோபரில், பள்ளிக் கல்வித்துறைக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.தள்ளுபடி அப்போது, தமிழக அரசு தரப்பில், 'கல்வி உரிமை சட்டத்தில், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. இது, முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல' என, தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்ற நீதிபதிகள், 'பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் பெற்றோருக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என சட்டத்தில் கூறப்படாத நிலையில், அவர்களுக்கு வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்க உத்தரவிட முடியாது' என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்