பள்ளி வளாகத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் மாணவர்கள்; காய்கறி நாற்று உற்பத்தி செய்யவும் பயிற்சி
படிப்புடன் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றியும், எதிர்காலத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். மாணவர்களுக்கு விழிப்புணர்வு மட்டுமின்றி, அவர்களை மரங்கள், வீட்டுத்தோட்டம், காய்கறி தோட்டம் பராமரிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.அந்த வகையில் பெரியகுளம் ஒன்றியம் வரதராஜ் நகர் ஸ்ரீவல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாடத்திட்டங்களுடன், பசுமை பாதுகாப்பதும் கற்பிக்கப்படுகிறது. மேலும் பள்ளி வளாகத்திலேயே காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்ய, மண்புழு உரம் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இது தவிர பள்ளி வளாகத்தில் மருதம், தேக்கு, வேம்பு, ஆலம், பூவரசம், நாவல் உட்பட நூற்றுக்கணக்கான மரங்கள் வரிசைகட்டி நிற்கிறது. மூலிகை தோட்டம் அமைத்தும் மாணவர்களுக்கு பராமரிப்பது,மூலிகைகளின் மருத்துவ பயன்களை ஆசியர்கள் விளக்கி வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் வயல்வெளி அமைத்து மாணவர்களுக்கு விதை விதைப்பு, பார் கட்டுதல், காய்கறி பயிர்கள் பராமரிப்பு, அறுவடை, பூச்சி நோய் தாக்கினால் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நேரடியாக ஆசிரியர்கள் விளக்குகின்றனர்.பசுமைத்தோட்டம் ராஜேந்திரபிரசாத், பள்ளி முதல்வர்: இயற்கை விவசாயத்தை நேசிக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். பள்ளி தாளாளர் மோகன்குமார், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியால் ஐந்து பசுமை குடில்கள் அமைத்து எட்டாம் வகுப்பு மாணவர்களை குழுக்களாக பிரித்து காய்கறி விதைகள் வாங்கி வந்து விதை நேர்த்தி, நடவு, பராமரிப்பு, நாற்று உற்பத்தி உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகிறது. மாணவர்கள் தாங்களாவே குழித்தட்டுகள் மூலம் நாற்றுகளை சாகுபடி செய்கின்றனர். அதனை பள்ளி வளாகத்தில் உள்ள தோட்டத்தில் சாகுபடி செய்ய பயிற்றுவிக்கப்படுகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பராமரிக்கும் தோட்டத்தில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரக்காய், கீரை வகைகள் அறுவடை செய்யப்படுகிறதுமண்புழு உரம் தயாரிப்பு ராமலட்சுமி, பள்ளி துணை முதல்வர்: மாணவர்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி வழங்க 3 இடங்களில் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.இங்கு தயாரிக்கப்படும் உரம் பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமையான சூழல் பராமரிப்பின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இது தொடர்பாக மாணவர்களுக்கு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்குகிறோம், என்றார்.