மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு: கல்வி கடை சரக்கல்ல என குமுறல்
ஒரு பக்கம் குழந்தைகள் உரிமைக்கான இலவசக் கட்டாயக் கல்வியை அளித்து, மறுபக்கம் சேவை வரியை விதித்து சுரண்ட முயற்சிக்கும் மத்திய அரசின் இந்த வித்தியாசமான போக்கு வேடிக்கையாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது. "மக்களை வரிச்சுமையில் தள்ளும் வகையில், "எல்லாத்துக்குமே வரி" என செயல்படும் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கை, கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இது, லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும்" என்கின்றனர் மக்கள். இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் தெரிவித்ததாவது: செந்தில்நாதன், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் கூட்டமைப்பு தலைவர், மதுரை: தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஒரு முழுமையான கல்வியை அளிக்கின்றன. பெற்றோர் மற்றும் மாணவர் நலன் கருதி பஸ்கள் வசதி, கேன்டீன், நூலகம் மற்றும் திறன்சார்ந்த பயிற்சிகள், மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவற்றால், பள்ளிகளுக்கு எந்த லாபமும் இல்லை. தொழில்நுட்பம் இல்லாத கல்வியை, தற்போது நினைத்து கூட பார்க்க முடியாது. கல்வியுடன் இது போன்ற விஷயங்களையும் தனியார் பள்ளிகள் கற்றுக்கொடுக்கின்றன. இவற்றையும் கல்வியின் ஒரு அங்கமாக கருத வேண்டும். இதை தனித்தனியாக பிரித்து பார்க்கக் கூடாது. இது போன்ற அறிவுசார்ந்த கல்விக்கு சேவை வரிவிதிப்பு என்பது வளர்ச்சியைபாதிக்கும். உஷாபிரபா, பெற்றோர், மதுரை: எனக்கு இரு பெண் குழந்தைகள். ஒரு பெண் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார். அவருக்கு கல்வி கட்டணம், தனி டியூஷன் கட்டணம் என அதிகம் செலவாகிறது. இந்நிலையில் மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியையும், பள்ளிகள் எங்களிடம் தான் வசூலிக்கும். இதனால் பெற்றோருக்குதான் கூடுதல் சுமை ஏற்படும். இலவசங்களுக்கு நிதியை வாரி இறைக்கும் அரசு, கல்விக்கு வரி விதித்திருப்பது கவலையளிக்கிறது. விலைவாசி உயர்வால், தள்ளாடும் நடுத்தர வர்க்கத்தினரை இந்த வரிவிதிப்பு, மேலும் பாதிக்கும். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாவட்டத் தலைவர், திண்டுக்கல்: சேவை வரியை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது. பள்ளிகள் நிர்வகிக்கும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி கிடையாது. சேவை வரிவிதிப்பு தேவையற்றது. பெற்றோருக்கு தான் கூடுதல் சுமை. பல்வேறு கெடுபிடிகளால் பல தனியார் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. சேவை வரி பிரச்னை பல பள்ளிகளை மூட வைக்கும். எம்.வி.சாஜி, பெற்றோர், பழநி: தற்போதுள்ள விலைவாசியில் நடுத்தர மக்கள் தரமான பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைப்பது சிரமம். இந்த நிலையில், சேவை வரி விதித்தால், அதுவும் பெற்றோர் தலையில் விழும். கணவன், மனைவி பணிக்கு சென்றால் தான், நல்ல பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் சூழல் உள்ளது. சேவை வரித் திட்டம், குழந்தை தொழிலாளர் உருவாக வாய்ப்பளிக்கும். பி.பரந்தாமன், நர்சரி, பிரைமரி, மெட்ரிக்., பள்ளிகள் சங்க மாவட்ட செயலாளர், தேனி: அரசின் எவ்வித ஆதரவும், நலத்திட்டங்களும் இன்றி மெட்ரிக்., பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு எந்த உதவியும் செய்யாத அரசு, அவற்றின் மூலம் வருவாயை எதிர்பார்ப்பது தவறு. சேவை வரிவிதிப்பால் மெட்ரிக்., பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படும். கல்வியாளர்கள் ஆலோசனை பெறாமல் எடுக்கப்பட்ட இம்முடிவு மக்களை நேரடியாக பாதிக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம் முழுவதும் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் ஒருமித்த முடிவு மேற்கொள்ள வேண்டும். என்.பாஷ்யம், பெற்றோர், சின்னமனூர்: அரசு கல்வியை வியாபாரமாக அங்கீகரித்து விட்டது என்பதற்கு இதை தவிர வேறு ஆதாரம் தேவையில்லை. சேவை வரி விதிப்பால், நடுத்தர மக்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி மூலம் அரசு வருவாய் ஈட்ட நினைத்தால், தனியாரும் வியாபார நோக்கில் செயல்பட வேண்டிய நிலை ஏற்படும். இது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது. எஸ்.ஜெயக்குமார், தாளாளர், ஏ.வி.எம்.எஸ்.மெட்ரிக்., பள்ளி, ராமநாதபுரம்: வணிக நிறுவனங்களுக்கு தான் சேவை வரி விதிக்க வேண்டும். மாணவர் தன் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள, பள்ளியில் கராத்தே, சிலம்பம் உட்பட பயிற்சி கட்டணங்கள், பள்ளி கட்டணத்துடன் வசூலிக்கப்படும். இதற்கு விதித்துள்ள சேவை வரியால், தனிதிறமையை வளர்க்கும் இதுபோன்ற வகுப்புகள் இனி ரத்து செய்யும் நிலை ஏற்படும். மாணவர்களின் சாதனைகள் முடக்கப்படும். பெற்றோர், மாணவரை பாதிக்கும் இந்த வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். ஆர்.சேதுராமன், தாளாளர், மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி: சேவை வரிவிதிப்பால் பெற்றோரின் சுமை மேலும் அதிகரிக்கும். நடனம், கராத்தே உள்பட பல்வேறு தனித் திறமையை வளர்க்கும் பயிற்சிகளுக்கு வரி விதித்தால், இவற்றில் சேர்க்க பெற்றோர் மறுத்து விடுவர். இதனால், மாணவர்களின் தனித்தன்மை குறைந்து போகும். இந்த சேவை வரி மூலம், பள்ளிகளில் கட்டணத்தையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். ஜெரால்டு ஞானரத்தினம், நோபிள் மெட்ரிக் பள்ளி செயலாளர் மற்றும் முதல்வர், விருதுநகர்: மத்திய அரசின் இந்த நெருக்கடி, தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, கட்டண விவரம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் தனியார் பள்ளிகளை, கண்காணித்து வரும் நிலையில், இந்த வரி விதிப்பும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேவை மனப்பாமையுடன் நடந்து கொள்ளும் தனியார் பள்ளிகளுக்கு இது தடைக் கல்லாக அமையும்.