வெளிநாட்டு மருத்துவக் கல்வி: தாய்லாந்து பல்கலையுடன் இணைந்து சேலம் விநாயகா மிஷன் மோசடி
சேலத்தில், விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளது. 2004ல், விநாயகா மிஷன் சார்பில், விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. தாய்லாந்தில் உள்ள, "ரங்சிட்" என்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து, அங்கு மருத்துவ படிப்பை நடத்துவதாகவும், படிப்பு முடிந்தவுடன், எம்.பி.பி.எஸ்., பட்டம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி, செல்வகுமார் என்பவர் உட்பட, மாணவர்கள் பலர், தாய்லாந்தில் உள்ள மையத்தில் சேர்ந்து, மருத்துவ படிப்பை முடித்தனர். நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தை, இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்கும் என்றும், இந்தியாவில் மருத்துவ தொழில் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், அவர்கள் நம்பினர். இதையடுத்து, இந்தியாவில் பயிற்சி பெறவும், மருத்துவராக பதிவு செய்யவும், தேசிய தேர்வு வாரியம் நடத்தும், தகுதித் தேர்வில் கலந்துகொள்ள மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதை, தேர்வு வாரியம் ஏற்கவில்லை; அனுமதி மறுத்தது. தாய்லாந்தில் உள்ள, "ரங்சிட்" பல்கலைக் கழகத்தை, தாய்லாந்து மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்கவில்லை; அது ஒரு தனியார் பல்கலைகழகம்; அதில் சேர்ந்த மாணவர்களை இங்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று, மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. இதையடுத்து, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு சென்றது. விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக் கழகத்துக்கு, சாதகமாக உத்தரவு இல்லை. தங்களை மோசடி செய்துவிட்டதாக, மாணவர் செல்வகுமார் என்பவர் அளித்த புகாரை, சேலத்தில் உள்ள, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் பதிவு செய்தது. இந்தப் புகாரை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தேசிய தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கலந்து கொள்ள, மாணவர்களை அனுமதித்து, தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தது. இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி சசிதரன், பிறப்பித்த உத்தரவு: "தற்போது, போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உரிமையில்லை என கூற முடியாது. மாணவர்களை தேர்வு எழுத அனுமதித்து, முடிவுகளை வெளியிடுமாறு, தேசிய தேர்வு வாரியத்தை, மனுதாரர் தரப்பு அணுகியுள்ளது. புகார் மீதான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அணுகியுள்ளது. மாணவர்களை தேர்வு எழுத, தேசிய தேர்வு வாரியம் அனுமதிக்காதது சரிதான், என, ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு தான் இறுதியானது. மனுதாரர் வழங்கும் பட்டம் அங்கீகரிக்கப்படாததால், இந்த மாணவர்களை தகுதித் தேர்வுக்கு அனுமதிக்குமாறு, தேசிய தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடும் பேச்சுக்கே இடமில்லை. மனுதாரர் வெளியிட்ட விளம்பரத்தை நம்பி, தாய்லாந்தில் உள்ள மருத்துவ படிப்பில் இந்த மாணவர் சேர்ந்துள்ளார். மனுதாரரின் மோசடியால், சில ஆண்டுகளை இழந்துள்ளார். பட்டம் பெற்ற பிறகும், மருத்துவ தொழிலை செய்ய முடியவில்லை. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பின், ஒரு மாணவர், போலீசை அணுகி புகார் கொடுத்துள்ளார். மாணவரின் எதிர்காலத்தை வீணாக்கியது மட்டுமல்லாமல், அவர் கொடுத்த புகாரை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோருகிறார். போலீசாரின் நடவடிக்கையை முறியடிக்க, மனுதாரர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. மாணவரின் எதிர்காலத்தைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும், மனுதாரருக்கு கவலையில்லை. மாணவர்களை ஏமாற்றியது மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்க்கையை துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். எனவே, விநாயகா மிஷன் தாக்கல் செய்த மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகிறது. மாணவர் செல்வகுமாருக்கு, ஒரு லட்சம் ரூபாயை, வழக்குச் செலவுத் தொகையாக, இம்மாதத்துக்குள் மனுதாரர் வழங்க வேண்டும். இல்லையென்றால், நில வருவாய் பாக்கி என கருதி, அந்த தொகையை, சேலம் கலெக்டர் வசூலிக்க வேண்டும்." இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டு உள்ளார்.