புகார்: கபாடி வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை பறிக்கும் கோவை மாவட்ட கபாடி கழகம்
கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகையை கோவை மாவட்ட கபாடி கழகம் பறித்துக்கொள்வதாக கபாடி வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்தாண்டு முதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் வீரர்களுக்கும், அணிகளுக்கும் முறையே, தலா ரூ. 1,000, ரூ. 750, ரூ. 500 என வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நடைபெறும் கபாடி போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை கோவை மாவட்ட கபாடி கழகம் பறித்துக்கொள்வதாக வீரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவை மாவட்டளவில் சுமார் 100 கபாடி அணிகளை உறுப்பினர்களாக கொண்ட இக்கபாடி கழகம், இவ்வாறு நடப்பது வேதனையளிப்பதாக வீரர்கள் தெரிவிக்கின்றனர். கபாடி வீரர்கள் கூறியதாவது: "கடந்த அக்., மாதம் பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள சாமிசெட்டிபாளையத்தில் நடந்த கபாடி போட்டியில் பரிசுகள் பெற்றோம். தொடர்ந்து, அம்மாதமே நேரு ஸ்டேடியத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த எங்களுக்கு எஸ்.டி.ஏ.டி., சார்பில் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையை பெற்றுக்கொண்டு வெளியே வந்ததும், கோவை மாவட்ட கபாடி கழக நிர்வாகி ஒருவர் இது நாங்கள் அளித்த பணம் எனக்கூறி பணத்தை பெற்றுக்கொண்டார். கேள்வி எழுப்பினால் போட்டிகளில் விளையாட முடியாதபடி செய்துவிடுவதாக மிரட்டுக்கிறார். இதுபோன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றனர். கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஸ்டேன்லி மேத்யூ கூறியதாவது: "பாதிப்புக்குள்ளான வீரர்கள் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளிக்கவேண்டும். அக்கடிதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை தமிழ்நாடு கபாடி கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஊக்கத்தொகை திரும்பவும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்புடைய கழகம் மீது நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடு கபாடி கழகத்தின் கையில்தான் உள்ளது" என்றார்.