உள்ளூர் செய்திகள்

விளையாட்டு மைதானம் அமைக்க இடமிருந்தும் பயன்பாடில்லை - மாணவியரின் கலையும் கனவு

பல்லடம்: பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க, இட வசதியிருந்தும் பயன்படுத்தாமல் இருப்பதால், மாணவியரின் விளையாட்டு கனவு கரைந்து வருகிறது. பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். விளையாட்டு துறையில் மாணவியரை ஊக்குவிக்க, பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களும், வெற்றிக்கோப்பை, ரொக்கப்பரிசு வாங்கி வருகின்றனர். உடற்கல்வி ஆசிரியர் மருதை கூறுகையில், "மாணவியர் விளையாட்டில் அதிக ஈடுபாடு மிக்கவர்களாக உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க, குடும்பத்தினர் முன்வருவதில்லை. கடந்தாண்டு மட்டும், கபடி, கோகோ, எரிபந்து போன்ற விளையாட்டுகளில் மாணவியர் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்றனர். விளையாட்டுக்கு தேவையான காலணி, உடை, உணவு வசதி கிடைப்பது பெரும்பாடாக உள்ளது. முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களிடம் இதுபோன்ற தேவையை கேட்டு பெற்றுக்கொள்கிறோம். மாணவியருக்கு தேவையானவை, ஏதோ ஒரு வகையில் கிடைத்தாலும், பள்ளியின் பின்புறம், மாணவியர் பயிற்சி பெறுவதற்கு நிலம் இருந்தும் பயனில்லாமல், பொட்டல் காடாக உள்ளது. அப்பகுதியை பள்ளியின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் விளையாட்டுக்கள் கற்றுக்கொடுக்கலாம்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்