உள்ளூர் செய்திகள்

ராகிங் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: ஏ.ஐ.சி.டி.இ.

புதுடில்லி: ராகிங் தொடர்பாக, உரிய விதிமுறைகளை பின்பற்றி, தேவையான நடவடிக்கை எடுக்காத, கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் - ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், கடந்த சில தினங்களுக்கு முன், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு, பொது அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில், ராகிங் நடவடிக்கைகளை, அடியோடு களையும் நோக்கில், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை, அந்த கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில், ராகிங் தடுப்பு குழு, ராகிங் தடுப்பு படை ஆகியவற்றை உருவாக்க வேண்டும். கல்லூரியில், சேர்க்கையின் போதும், விடுதி அறை ஒதுக்கும்போதும், உரிய ஏற்பு கடிதம் பெற வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுள்ள விடுதி காப்பாளரை நியமிக்க வேண்டும் புதிய மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க, தொழில் முறை கவுன்சிலிங் வழங்குபவர்களை நியமிக்க வேண்டும். ராகிங் குறித்த சட்டங்கள், தண்டனைகள் குறித்த மிகப் பெரிய போஸ்டர்கள், பேனர்களை, கல்வி நிறுவன வளாகத்தில் நிறுவ வேண்டும். முன்னெச்சரிக்கை: இந்த விதிகளை, பின்பற்றாத, ராகிங்கை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத, ராகிங் நடந்து, உரிய தண்டனைகள் வழங்காத, கல்வி நிறுவனங்கள் மீது, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்கான கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்