உள்ளூர் செய்திகள்

ஒரே மாதத்தில் முதுகலை ஆசிரியர்கள் மாறுதலாகி சென்றதால் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், பணிக்கு வந்த ஒரே மாதத்தில், முதுகலை ஆசிரியர்கள், தங்கள் சொந்த ஊருக்கு மாறுதலாகி சென்றதால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 34 அரசு மேல்நிலை, 17 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 30 அரசு மேல்நிலை, 11 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் காலியாக இருந்த 122 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஜூனில் நடந்த கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. பணியில் சேர்ந்த வெளி மாவட்ட ஆசிரியர்கள் ஒரே மாதத்தில் தங்களின் சொந்த ஊருக்கு மாறுதலாகி சென்றுவிட்டனர். இதனால் மங்களக்குடி, எஸ்.பி.பட்டினம், திருவாடானை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மீண்டும் காலியாக உள்ளன. மங்களக்குடி, உத்தரகோசமங்கை, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், ரெட்டையூரணி, தாமரைக்குளம், உச்சிப்புளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக ராமநாதபுரம் கல்வி மாவட்டத் தலைவர் வான்மிகநாதன் கூறியதாவது: வேலை கிடைத்தால் சரி என்ற நோக்கில் புதியதாக பணியில் சேருபவர்கள் எந்த பள்ளியிலும் ஆசிரியர் பொறுப்பு ஏற்கின்றனர். சில வாரங்களில் தங்களின் சொந்த ஊருக்கு மாறுதலாகி சென்றுவிடுகின்றனர். இதனால் மாவட்டத்தில் பல பள்ளிகளில் பிளஸ் 2 வேதியியல் இயற்பியல் உள்ளிட்ட பாட ஆசிரியர் பணியிடங்கள் மீண்டும் காலியாக உள்ளன. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முனைப்பு காட்டும் மாவட்ட கல்வி நிர்வாகம், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு இடைக்காலத்தில் பணியிட மாறுதல் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உருவாகும் புதிய ஆசிரியர் பணியிடங்கள் காலி பணியிடங்களாகின்றன. அப்பணியிடங்களுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பில்லை" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்