அரசு பள்ளியில் பெயர்ந்து விழும் கூரை: மாணவர்களுக்கு ஆபத்து சுனாமி குடியிருப்பில் வகுப்பறை
கீழக்கரை: ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்.25ல் கட்டடத்தின் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த நிலையில் மாணவர்களுக்கு ஆபத்து உள்ளதால் கட்டடத்தை சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தினர்.ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்புகள் உள்ளன. தலைமையாசிரியர் உட்பட 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் உள்ளனர். இங்கு 6 மற்றும் 7ம் வகுப்பு முதல் மாடி கட்டடத்தில் செயல்படுகிறது. அக்.25ல் படிக்கட்டு அருகே உள்ள கூரை கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.அப்போது அங்கு மாணவர்கள் நடமாட்டம் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு கருதி சுனாமி குடியிருப்பு கட்டடத்தில் வகுப்பறை செயல்படுகிறது.பெற்றோர்கள் கூறியதாவது: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாடி கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சுவர்களில் கசிகிறது. கட்டடத்தின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. முதன்மை கல்வி அலுவலகத்தினர் பள்ளியை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றனர்.